பெரியதொரு குங்குமச் சிமிழும்
சிறியதொரு சாம்பல் பொட்டலமும்
போதுமானது...
எம் இனத்தை அழிக்க!
புரியாத மந்திரமும்,
அறியாத சடங்குகளும்
போதுமானது...
எம் சனத்தை கவிழ்க்க!!
பால், பழம், தேன், வெண்ணை,
சக்கரையென சகலத்தையும்
புனிதக் குளியலுக்கு
விரையமாக்கும் இடத்தை
திருத்தலம் என்கிறார்கள்...
திருந்தாத சென்மங்கள்!!
பால் வடியும் முகங்கள்,
பாசத்திற்காக ஏங்கும்போது...
"பாவம்" என்று ஒதுங்கி நின்று,
பத்து காசை மட்டும்
பாத்திரத்தில் போட்டுவிட்டு
பாவம் கழிந்ததென
பாரினில் பிதற்றிக்கொள்ளும்
பாழாய்ப்போன நெஞ்சங்கள்!!
வேண்டுதல் எனும் பெயரில்..
வேண்டாத அணுகல்கள்!
கூரான ஆயுதத்தால்
குருதியின் குவியல்களங்கே..
தானம் செய்ய வேண்டும்போது
வானம் அளவிற் வாய்ப்பிளக்கும் பிறவிகள்!
தேவையில்லா இடத்தில் விரயம் செய்வதும்,
தேவையான இடத்தில் ஓட்டம் பிடிப்பதும்,
எம் இனத்தின் பாரம்பரியமாகிப் போனது!!
கற்றதனைத்தும் மறந்து,
உற்ற நெஞ்சங்களை இழந்து,
வெற்றாகிப் போன மனிதனையும்
குற்றம் செய்யும் விழிகளையும்
குத்தாத அந்த மாபெரும் சக்தி..
தமக்கான மாலையில்
ஒரு மலர் குறைந்திட்டாலும்
கண்ணைக் குத்திப் போடுமென்றால்...
சிரிப்பைத் தவிர வேறென்ன வரும்?
"சாமிக் குத்தம்" என்பது போல...
"மனிதக் குத்தம்"..
"இனக் குத்தம்"..
"மொழிக் குத்தம்" என்ற
சமூகவியல் குற்றங்கள்
இருந்திருக்கக் கூடாதா?
ஏதோ ஒன்றுக்கு பயந்து
வாழ்ந்துப் பழகிப் போன எம்மினம்...
இதற்குப் பயந்தாவது...
தம்முரிமைகளை மீட்கும்
என்ற நப்பாசையில் நான்
குமுறுகையில்...
சிரிப்புத்தான் வருகிறது!
புனிதத்தை எய்துவிட்ட மனிதமெல்லாம்...
அனைத்து ஊடாகவும் கடந்துச் செல்லும்
கடவுளென காட்டப்பட்டதால்...
மனிதத்தை உணர்த்தும் மனித
இலக்கணங்கள் இல்லாமல் போனது
எம்மினத்தின் சாபக்கேடு
என்றால் சிரிப்பைத் தவிர
வேறென்ன வரும்?
முண்டமாகிப் போன எம்மினம்..
மூடப்பழக்கத்தை விட்டொழித்தால்..
உலக அழிவிற்குமுன்...
இன அழிவைத் தவிர்க்கலாம்...
இது சிரிப்பதற்கல்ல...
சிந்திப்பதற்கு!!!
நிச்சயமாக சிந்தி்க்க துாண்டும் வரிகளை எழுதியுள்ளீர்கள். கூறவேண்டிய கருத்துக்களை நகைச்சுவையுடன் சேர்த்து சிந்திக்கவே செய்கிறது உங்கள் படைப்பு.
ReplyDelete:)
ReplyDeleteகடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதைவிட அந்த கடவுளை நாம் வணங்கும் முறைகளில் எவ்வளவு தவறுண்டு என்பதுவும் இக்கவிதையின் மூலம் காட்டியிருக்கும் கவிஞரின் வரிகளை வாழ்த்த வார்த்தைகளில்லை.
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே..
ReplyDelete