Saturday, November 14, 2015

வாழ்வியல் நிஜங்கள்

எதுவுமே இல்லாத பொழுது ஒரு மனிதனிடத்தில் இருக்கும் பொறுமையும் எல்லாமே இருக்கும்பொழுது ஒரு மனிதனிடத்தில் இருக்கும் நடத்தையும் அவனை யார் என்று உலகுக்கு காட்டுமென்கிறார்கள்.

எல்லாமே இருந்து பழகிவிட்டப் பிறகு, எதுவுமே இல்லாமை என்பது வெறுமையைத் தருகிறது. வெறுமையை உணரவிடாமல் தடுப்பதற்கு உறவுகள்கூட சில சமயங்களில் உதவுவதில்லை. காரணம்யாதெனில், உதவிக்கூட சலித்துப் போய்விடுமென்ற நிதர்சன நிஜமே. இழப்பதில் மீட்பவை என்ற என் சுய பட்டியலில் போதனைகளே முதலிடம் வகிக்கின்றன. இழப்பு கவலையைக் காட்டிலும் பல போதனைகளை நமக்கென விட்டுச் செல்கின்றது. அதில், கண்டெடுத்த நிஜமானது, எப்பேர்ப்பட்ட சூழலிலும் யாரிடமுமே உதவிக்கேட்க கூடாதென்பதும், தாமாகவே உதவ வருவோரைத் தவறாமல் தடுப்பதென்பதும் அவசியமானவை. காலத்தினாற் செய்த உதவி என்றாலும், அதனை மறவாமல் திருப்பி தந்தாக வேண்டும்.  

உதவிகேட்பதும் உதவியைக் கேளாமலே பெற்றுக்கொள்வதும் வெட்கப்படத்தக்கதே! இழப்பு நமக்குத் தவறாமல் உணர்த்தும் அற்புத பாடமிது. வேண்டுமென்றே ஒன்றை இழந்திருக்க மாட்டோம். சூழலும் அதனைச் சார்ந்தோரும் நாம் எதையோ ஒன்றை இழக்க காரணமாக இருந்தாலும், இழந்தவர்கள் நாம் என்பதால் இச்சமுதாயம் நம்மைத்தான் தூற்றும். தூற்றுபவர்கள் தூற்றட்டுமென்று நாமும் போராட எத்தனிப்போம். அப்பொழுதுதான், யாவுமே நம்மைத் தூற்றுவதை உணர்வோம்! நெறுக்கமான உறவுகள் கூட காலவதியோடுத்தான் உதவுகின்றன என்பதை உணரும் தருணங்கள் வலிகள் நிறைந்தவை.

சுயகௌரவமென்ற ஒரு பெரிய வலையிலிருந்து மெல்ல மெல்ல தவழ்ந்து வந்து, தகுதி ஏதும் பாராமல் ஏதாகினும் செய்து நம்மை நாமே காத்துக்கொள்ள விளையும் தருணங்கள் வர்ணிக்கவியலாதவை. எதுவுமே இல்லாமல் இருப்பதைவிட ஏதாவது ஒன்று இருக்கட்டுமே என்று பாடுபடும் பொழுதும்கூட, ஒரு வழியும் பிறக்காதது வேதனையே என்றாலும், நம் முயற்சிகள் அறிந்தும், வழிகள் பிறக்க நாம் காத்துக்கிடப்பது அறிந்தும், நம்மை ‘ச்சீ’ என புகலும் இகழ்வோரின் தூற்றல்தான் மிகக் கொடியது என்பேன். தூற்றலை துடைத்தொழி என பார்போருக்கு நாம் முன்பொருநாள் அளித்த இலவச அறிவுரைகள் நமக்கே செல்லுபடியாகததைக் கண்டு வியந்து நெகிழ்ந்து, வாழ்தலில் அவ்வப்பொழுது சாதலைப் பார்த்துவிடுவோம். இருப்பதும், நகர்வதும், நகைப்பதும், நடிப்பதும் வெறும் சடலமோ என்ற வினா நமக்குள்ளேயே வந்து போகும்; ஆனாலும் சாகாமல் வாழ்ந்துக்கொண்டுதான் இருப்போம். எதிர்ப்பார்ப்புகளுக்கு அப்பாற்ப்பட்ட வாழ்தலில், இலட்சியத்திற்கேது இடம்? ஆனாலும், இலக்கற்ற வாழ்வா உனதென்ற நகைப்புகள் ஆயுதமின்றி ஆளைக்கொந்திவிட்டிருக்கும்!


நகைத்தோருக்கு நன்றி நவிழ்ந்து, இகழ்ந்தோருக்கு இன்முகம் காட்டி, வழிதேடும் பயணமே எமதாகட்டும்! எமக்கென இருக்கும் உயிரும், அதற்குள் இருக்கும் நம்பிக்கையுமே எம்மை இழுத்துச்செல்லும் சக்கரங்கள் ஆகட்டும். நாம் வாழப்பிறந்தோர். வாழ்வென்பதும் ஓர் இயல். கற்றுத்தெளிவோம் வாழ்வியலின் இரகசியங்களை. இன்று தூற்றுவோர் நாளைப் போற்றுவர். மாற்றங்கள் மாற்றுபெரும். வாழ்தல் இனிது!

Wednesday, July 16, 2014

இணங்கனவனே இணையுமவனே!


அன்னியோன்னியத்தின் அடித்தளமவனே
அறவினைவிதைத்தலில் அறவனுமவனே

அறிவுறுத்தல்களில் ஆசானாகி
அன்புவாழ்வின் அடிப்பலனானோன்

இசையும் தருணம் இன்பம்வார்த்தோன்
இடைவிடாது நேசங்காத்தோன்

இணங்கனவனே இணையுமவனே
இமைப்பொழுதேனும் பிரியேனவனை!

இமைப்பொழுதேனும் பிரியேனவனை!


Saturday, August 3, 2013

எல்லிநாயகனே!



முற்றும் தெரிந்தவனே 
முறிசெய்தான்  என்னை 

முளையான் என்றிருந்தேன்
முற்பாடனென அறியேன் 

கன்னலமு தென்றான் 
கன்னித்  தமிழென்றான் 

எல்லைத்  தகர்த்திட்டே 
என்வசம்   நீவாவென்றான் 

எய்தகாதற் அம்புகற்கு 
எதிர்முகம் நேசமென்றான்!

செந்நிறுவிட காதலினை 
செந்தேனே வாவென்றான்  

அகத்தின் அற்புதனானவனே
அன்பின் ஆராவமுதமவன்

அவ்வோன் ஆரென்றறிவீரோ?
அவனென் எல்லிநாயகனே!

vayathu muthirntha kulanthaigal (வயது முதிர்ந்தக் குழந்தைகள்)

Sunday, March 11, 2012

அகவல்





அகநிலை அறிந்தோனே -எந்தன்
அகவல் கேளாயோ -நான்
அகிலம் மறந்ததென்ன -உந்தன்
அகக்கண் பார்வையிலே

எழிலிய காதலினாற் - விழி
எழும்பிடக் களைக்குதைய்யா -கவி
எழுதிட முடிவதில்லை - புவி
உழலுதல் தெரிவதில்லை

முந்தைய துயரினையே -நான்
உன்தயவால் மறந்தேன் -முன்
அகத்தில் வீற்றிருந்தாய் -பின்
அகத்தானை மலர்ந்தாய்!

மங்கல தினத்தன்று -எங்கும்
மங்கல பாவொலிக்க -அங்கு
மகிழ்நன் நீயாவாய்! -என்னுள்
மகிழ்தல் வேர்விடுமே!

Wednesday, September 15, 2010

காதலுக்கேதடா வயது???


மூதாட்டி:
பெற்றெடுத்த முத்துக்களை காணவில்லை
பெயர்காக்க ஒரு மலரும் பூக்கவில்லை
தள்ளாடும் வயதில் ஒரு தடியும் இல்லை
தளராமல் இருக்கும் மனம் எனக்குமில்லை..!

முதியவர்:
வாடுவதும் ஏனோ என் கண்ணே...
தேடுவதும் எதையோ என் பெண்ணே...
உன் மணவாளன் நானிருக்கேன் மணியே..
உன் மகனை மறந்து வா தனியே..

மூதாட்டி:
பெற்ற மனம் என்றுமே பித்தத்தான்
பெற்ற வலி என்றுமே எனக்குத்தான்
விட்டுவர கூவுதிங்கே இதழ்தான்
விம்மியழ ஏங்குமிங்கே மனம்தான் !

முதியவர்:
மணமுடித்த நாளே முடிவெடுத்தேன்
மரணம்வரை நான் உடனிருப்பேன்..
மாதரசி உன்னில் நான் கலந்திருப்பேன்
மார்போடு உன்னையே அணைத்திருப்பேன்

மூதாட்டி:
நரைத்த முடியும் நடுங்கும் உடலும்
நடவா காலும் நகைப்பது தெரியலையோ?
கிழடு தட்டியும் கிண்டலா உமக்கு?
கிட்டுமோ காதல் இவ்வயதில் நமக்கு?

முதியவர்:
அட அறியாமைக்குப் பிறந்தவளே
அறிந்துகொள்ளடி அன்பான என்னவளே
இனித்தான் காதல் கிட்ட வேண்டுமா?
இருபதில் கிட்டியதை மறைக்கலாகுமா?

நாற்பதிலும் காதல் நாற்றாங்காலிடும்
ஐம்பதிலும் கூட அகக்களிப்பு கூடும்
அறுபதிலும் நேசம் அழகாய்ப் பூக்கும்
எழுபதிலும் கூட மெதுவாக தாக்கும்

வம்பை காதலில் நுழைக்காமல் மோது
அன்பை செலுத்து கொண்டவர் மீது
சாதலுக்கே வயதில்லை எனும்போது
காதலுக்கேதடா வயதென்று ஓது

மூதாட்டி:
அடுத்தடுத்து உரைக்கின்றீர்
எடுத்தெடுத்து தொடுக்கின்றீர்
மடுத்தது என் செவிதானா???
தொடுத்தது உம் கவிதானா?

அழகாக காதலின் தெளிவுரைத்தீரே
அன்பாக எந்தன் கரம் பிடித்தீரே
காதல் கடனை எமக்களித்தீரே
கடன்காரியாய் எமை அவதரித்தீரே!

முதியவர்:
காதலியே நீ எனக்கு என்றுரைப்பேன்
கடன்காரியாக்கவா கருத்துரைத்தேன்
கன்னம் நனைய நான் காத்திருப்பேன்
காதலை உணர்த்தும்வரை பார்த்திருப்பேன்

மூதாட்டி:
வந்தேன் வந்தேன் காதல் சித்திரமே
தந்தேன் தந்தேன் காதல் முத்திரையே
தித்திக்கும் காதல் சின்னம்கொண்டே
எத்திக்கும் படரட்டும் நேசச்செண்டே!

முதியவர்:
மீட்டுப் பார்த்தேன் பழங்கதையை
மீண்டும் வீழ்ந்தேன் உன் வலையில்
மீள முடியாமல் உன் பிடியில்
மாள வேண்டுமே உன் மடியில்!

"முதுமை இருந்தது முகத்தினிலே புதுமை பிறந்தது அகத்தினிலே..!!"

Monday, July 19, 2010

அம்பலப்படுத்துவதடியோடு ஒழியட்டும்!!!


வீடெங்கும் தடபுடல் அமளியென அதிர்ந்திடவே
வீதியெங்கும் தோரணங்கள் தொங்கிச் சிரித்திடவே

வீடியோக்காரர்களும் வித விதமாய் படம்பிடிக்க
வீணான செலவுகள் எதற்கென்றே புரியவில்லை!

பதின்மூன்று வயதிலவன் பத்து "ஏ"க்கள் பெற்றிருந்தான்
பந்தலும் போடவில்லை பரிசுகளும் குவியவில்லை

பத்தே வயதுபெண் பருவம்தான் அடைந்துவிட்டால்
பட்டுப்புடவைகட்டி பலகாரங்கள் பல ஊட்டி

பத்திரப்படுத்துவாதாய் பதுக்கியேவைத்தார்கள்
பத்தியமானதாய் எதை எதையோ சொன்னார்கள்

ஆருமில்லா அறைதனிலே அவளை அமர்த்திட்டர்
ஆணியொன்றினையோ அவள்தலையில் செருகிட்டர்

அதற்கான காரணம் யாதென கேட்டிட்டால்
அமுக்கிப்போடும் பேயினை விரட்டவே என்றிட்டர்

ஆண்பாலும் பெண்பாலும் தெரிந்திருக்கு பேயுக்கு
அப்பெண்படும் பாடுத்தான் தெரிவது யாருக்கு?

அவளுக்கும் அண்ணனுக்கும் இடைவெளி கூடும்
அப்பனுக்கும்கூட அதேகதைத்தான் தொடரும்

விடியலதை எதிர்ப்பார்த்து குளியாட்ட வந்திடுவர்
விட்டப்பணம் பிடிக்க விழாவுக்கு வித்திடுவர்

விந்தையான கதைகளை வரம்பின்றி செப்பிடுவர்
விதிமுறைகள் பலவற்றை அவளுக்கு திணித்திடுவர்

அழகான அழைப்பிதழ்கள் ஆயிரம் அச்சிட்டு
அதற்கு மஞ்சளும் பூசி மங்கள நாள் பார்த்து

பூப்புனித நீராட்டு விழாவினை நிகழ்த்துகின்றார்
பூப்பெய்த கதையை பூரிப்பாய் மெச்சுகின்றார்

ஆசைவரும் அவளுக்கும் அறியாத வயதன்றோ?
அழுதே அடம்பிடிப்பாள் விழாவெடுக்க வேண்டுமென்று

ஆய்ந்துணர்க உறவுகளே அவசியமா இதுவெனவே
அசிங்கத்தை அவளுக்கு ஆழமாய் உணர்த்துகவே

மாமியார் சொல்லியதால் மதியிழந்து நிற்காதே
மாமன்காரன் வந்துவிட்டால் மாலைப்போடவிடாதே

சராசரியாய் வரும் சங்கதியாம் பெண்ணுக்கு
சாதனைப் படைத்ததுபோல் பிதற்றல்கள் எதற்கு?

வயதிற்கு வந்துவிட்டால் ஊரெல்லாம் சொல்லுவதும்
வாலிப நெஞ்சதனில் நஞ்சதனை புகுத்துவதும்

காணாத வளர்ச்சிகளை காட்ச்சிக்கு கொணர்வதுவும்
காமத்தை ஏற்றிவிடும் கடுஞ்செயலைக் கூட்டிவிடும்!!

மூடத் தனத்தினையே மென்மேலும் நாட்டிவிடும்
முடக்கிஒடுக்கிடவே பெண்ணியமும் தோல்வியுறும்

வெற்றான செயல்களை வெறுத்துநீ ஒதுக்கு
வெட்கிக் குனிந்திடும் காரியத்தை கவிழ்த்து

விஞ்ஞான வளர்ச்சியினால் மிளிரட்டும் அறிவு
வீணான சடங்குகளைத் தீயிட்டுக் கொளுத்து!!