Sunday, December 20, 2009

சிரிப்புத்தான் வருகிறது!!


பெரியதொரு குங்குமச் சிமிழும்
சிறியதொரு சாம்பல் பொட்டலமும்
போதுமானது...
எம் இனத்தை அழிக்க!
புரியாத மந்திரமும்,
அறியாத சடங்குகளும்
போதுமானது...
எம் சனத்தை கவிழ்க்க!!

பால், பழம், தேன், வெண்ணை,
சக்கரையென சகலத்தையும்
புனிதக் குளியலுக்கு
விரையமாக்கும் இடத்தை
திருத்தலம் என்கிறார்கள்...
திருந்தாத சென்மங்கள்!!

பால் வடியும் முகங்கள்,
பாசத்திற்காக ஏங்கும்போது...
"பாவம்" என்று ஒதுங்கி நின்று,
பத்து காசை மட்டும்
பாத்திரத்தில் போட்டுவிட்டு
பாவம் கழிந்ததென
பாரினில் பிதற்றிக்கொள்ளும்
பாழாய்ப்போன நெஞ்சங்கள்!!

வேண்டுதல் எனும் பெயரில்..
வேண்டாத அணுகல்கள்!
கூரான ஆயுதத்தால்
குருதியின் குவியல்களங்கே..
தானம் செய்ய வேண்டும்போது
வானம் அளவிற் வாய்ப்பிளக்கும் பிறவிகள்!
தேவையில்லா இடத்தில் விரயம் செய்வதும்,
தேவையான இடத்தில் ஓட்டம் பிடிப்பதும்,
எம் இனத்தின் பாரம்பரியமாகிப் போனது!!

கற்றதனைத்தும் மறந்து,
உற்ற நெஞ்சங்களை இழந்து,
வெற்றாகிப் போன மனிதனையும்
குற்றம் செய்யும் விழிகளையும்
குத்தாத அந்த மாபெரும் சக்தி..
தமக்கான மாலையில்
ஒரு மலர் குறைந்திட்டாலும்
கண்ணைக் குத்திப் போடுமென்றால்...
சிரிப்பைத் தவிர வேறென்ன வரும்?

"சாமிக் குத்தம்" என்பது போல...
"மனிதக் குத்தம்"..
"இனக் குத்தம்"..
"மொழிக் குத்தம்" என்ற
சமூகவியல் குற்றங்கள்
இருந்திருக்கக் கூடாதா?
ஏதோ ஒன்றுக்கு பயந்து
வாழ்ந்துப் பழகிப் போன எம்மினம்...
இதற்குப் பயந்தாவது...
தம்முரிமைகளை மீட்கும்
என்ற நப்பாசையில் நான்
குமுறுகையில்...
சிரிப்புத்தான் வருகிறது!

புனிதத்தை எய்துவிட்ட மனிதமெல்லாம்...
அனைத்து ஊடாகவும் கடந்துச் செல்லும்
கடவுளென காட்டப்பட்டதால்...
மனிதத்தை உணர்த்தும் மனித
இலக்கணங்கள் இல்லாமல் போனது
எம்மினத்தின் சாபக்கேடு
என்றால் சிரிப்பைத் தவிர
வேறென்ன வரும்?

முண்டமாகிப் போன எம்மினம்..
மூடப்பழக்கத்தை விட்டொழித்தால்..
உலக அழிவிற்குமுன்...
இன அழிவைத் தவிர்க்கலாம்...
இது சிரிப்பதற்கல்ல...
சிந்திப்பதற்கு!!!

Thursday, December 3, 2009

வயது முதிர்ந்தக் குழந்தைகள்!!


வெறிச்சோடிப் போயிருந்த
அந்த வெற்றுலகத்தில்...
அன்புக்கான ஏக்கம் மட்டும்
தலைவிரித்து ஆடிக்கொண்டிருந்தது!

அந்த மண்டலத்தை
என்னவென்று அழைப்பது?
மனிதம் வாழும்
கூடு என்றா?
முதிர்ந்த குழந்தைகளின்
கோவில் என்றா?
பெற்றவருக்காக பிள்ளைகள் கட்டியமைத்த
தனிக்குடித்தன கொட்டகை என்றா?
புறக்கணிக்கப்பட்ட புண்பட்ட
நெஞ்சங்களின் சரணாலயம் என்றா?

அங்கே...
நடக்கவே முடியாமல்,
நான்குச் சக்கர வண்டியில்
நகர்ந்துக்கொண்டிருந்தால் ஒருத்தி!
தடுக்கி விழுவோமா என்ற அச்சத்தில்
தாங்கிப் பிடிக்க நாதியற்று,
தடியோடு தள்ளாடிக்கொண்டிருந்தார் ஒருவர்!

இவர்களைப் போலவே..
அங்கே..
அறுபதுக்கும் மேற்பட்டவர்கள்...
கூண்டுக்கிளிகளாகவும்,
குற்றவாளிகளாகவும்..

நன்றியில்லா நாய்களை
சேய்களாய் ஈன்றெடுத்த
தவறைத் தவிர,
வேறேதும் செய்திடவில்லை...
அந்த வயது முதிர்ந்தக் குழந்தைகள்!!

அந்தப் பொக்கை வாய்களில்,
பொன்னைவிட மேலாக
மின்னிய புன்னகைகள்!
தடவிக் கொடுக்கும்போது
தன்னிலையை மறந்து,
தமக்கென யாருமில்லையென
ததும்பி வரும் கண்ணீர்த்துளிகள்!

ஆடிப்பாடும் போது மட்டும்
அவர்களை மறந்துப்போனார்கள்!
அன்பாய் பேசும்போது,
அவர்தம் பிள்ளைகளின் நினைவுகளை
அணைத்துக்கொண்டார்கள்!

"தவமிருந்துப் பெற்றேன், தங்கமாய் காத்தேன்
தவழும் வயதில் தாங்கிப் பிடித்தேன்..
தரணியில் உயர்ந்திட தட்டியும் கொடுத்தேன்...
தாய் என் வளர்ப்பில் தவறேதும் இல்லை"
இது அங்கிருந்த முனியம்மாளின் முனுகள்.

"நோய்வாய்ப்பட்டு நொந்து போயிருந்தேன்..!
என் மகளோ..
நோய் பற்றிக் கொள்ளுமென பயந்து போயிருந்தாள்!
கூனிக் குறுகி,
அடக்கி அமிழ்ந்து
இருமினேன்; தும்மினேன்!
இனி..
சுதந்திரமாய் இருமலாம்..சுதந்திரமாய் தும்மலாம்..
ஆனால் இங்கில்லை,முதியோர் இல்லத்தில்
என்று அனுப்பிவைத்தாள்!
அவசரமாய் விட்டுச் சென்றதால்..
பாதை மறந்து போனாள் போலும்..
இன்னமும் வரவே இல்லை!"
இது கருப்புசாமி தாத்தாவின் கண்ணீர் வடித்த கதை..

இப்படித்தான்..
என் பிறந்தநாள் அவியப்பத்தில்
ஏற்றி வைத்த மெழுவர்த்திகள் போல...
கருகி கருகிப் போன அவர்களின் கதையும்..
உருகி உருகிப் போன என் மனமும்...!

அந்த
திறந்தவெளி சிறைச்சாலையில்
எங்கும் இரைந்துக் கிடந்தன
குமுறல்கள்...
அங்காங்கே சிதறிக்கிடந்தன
அவலங்கள்...
அன்பு மட்டுமே
அவற்றிற்கு நிவாரணமாக...!

அந்த முதிர்ந்தப் பிஞ்சுக் குழந்தைகளின்
அன்பு வேண்டுகோள் மட்டும்
என் மனதை கொந்தி எடுத்து கூர் போட்டது...
மீளப் பெறவியலாத அந்த
இறுதி வசனம்..

"உன் பிறந்த நாளுக்கு மட்டும்
வந்து போகாதே..
எங்கள் இறந்த நாளுக்கும் வந்து போ"

கேட்ட பொழுதில் கண்ணீரை மட்டுமே
பதிலாய் வடிக்க முடிந்தது..
மனிதத்தை இழந்து விட்ட
மிருகங்களை கடிந்துக் கொண்டது
என் மனம்...

Wednesday, December 2, 2009

தேன்!


வழியும்போது...
வசியம் செய்தது!
வளைந்துக் கொடுத்தால்..
விரட்டி விட்டது!
சுவைக்க நினைத்தேன்...
ஆவல் அழைத்தது!
தேடி அலைந்தேன்...
உள்ளம் சிதைந்தது!
வாட்டி வதைக்கையில்...
நெஞ்சம் கடுத்தது!
நானாய் எடுத்த கணம்..இனித்தது...!
ஆனாலும் நிலைக்கவில்லை...!
வலி தந்த வழி..
எனக்கு வரைபடம் வரைந்தது!
வரம்பு மீற கூடாதென
வரையறையும் போட்டது!
வேண்டாமென மனதில் தோன்றும் எண்ணங்கள்..
ஏனோ தொண்டை குழாயை எட்டிப் பார்த்து
இதழ் வழியே உதிரும்போது
வேண்டும் வேண்டும் என்கின்றன?
நானாய் அழிக்கவில்லை...
தானாய் அழிகின்றன..
எனக்கான எல்லைக் கோடுகள்!
அரை குறையாய் வந்து போகும் ஏக்கம்!
அவ்வப்போது எட்டிப் பார்க்கும் தூக்கம்!
எதையுமே சாதிக்கா உணர்வலைகள்...
மௌனத்தையாவது சாதிக்கட்டும்!
சுவையறிந்த நா
செத்துத் தொலையட்டும்!
எனை சோதித்த சுவையை...
மறந்து போகட்டும்!
இனிவரும் காலங்கள்
இனிக்காமல் போனாலும்
தெவிட்டாமல் போகட்டும்

உங்கள் தமிழ் மொழி பேசுகிறேன் ..


பாரெங்கும் எனது பெயர் மணக்கயிலே
படிப்பிக்க ஆயிரம் பேர் இருக்கையிலே
படிக்க மறுப்பது ஏன் குழந்தாய்? -எனை
படிக்க மறப்பதுவும் ஏன் குழந்தாய்?

வள்ளுவனுள் வாசகமாய் வளர்ந்தேனே..
ஔவை மடி ஔடதமாய் தவழ்ந்தேனே
கம்பன் வழி காவியமாய் கரைந்தேனே
பாரதியில் பாக்களாய் படிந்தேனே

தித்திக்கும் என்றார்கள் ஒரு சிலபேர்..
தெவிட்டாது என்றார்கள் பற்பல பேர்..
எத்திக்கும் எனது பெயர் செழிக்குமென்றால்
எதற்காக எனை படிக்க மறந்து நின்றாய்?

சொக்கும் தமிழ் உனையாள வேண்டாமா?
சொல்வளமும் சிறப்புற வேண்டாமா?
பிறச்சொல்லை புகுத்தாதே எனக்குள்ளே
பாழாகி போவேன் நான் தரணியிலே..

எனது வழி தமிழனாய் பிறந்தவனே
எனது வம்ச வாரிசாய் வளர்ந்தவனே
எனை வளர்க்க மறந்த மானிடனே
எனை சுமக்க வெறுக்கும் வெறும்பயலே

நான்படும் வேதனைக்கு அளவில்லையே
நலங்குன்றி போவேனோ தெரியவில்லையே
நாடெங்கும் தேய்கின்றேன் நாதியில்லையே
நான் மடியும் நாட்களோ தூரமில்லையே

காப்புறுதி வேண்டி நான் நிற்கின்றேன் -எனை
கண்ணியமாய் காக்க வேண்டுகின்றேன்
காசு பணம் தேவையில்லை காவலுக்கு -எனை
காதலிக்க காப்பாற்ற மனமுண்டா?