Wednesday, December 2, 2009

உங்கள் தமிழ் மொழி பேசுகிறேன் ..


பாரெங்கும் எனது பெயர் மணக்கயிலே
படிப்பிக்க ஆயிரம் பேர் இருக்கையிலே
படிக்க மறுப்பது ஏன் குழந்தாய்? -எனை
படிக்க மறப்பதுவும் ஏன் குழந்தாய்?

வள்ளுவனுள் வாசகமாய் வளர்ந்தேனே..
ஔவை மடி ஔடதமாய் தவழ்ந்தேனே
கம்பன் வழி காவியமாய் கரைந்தேனே
பாரதியில் பாக்களாய் படிந்தேனே

தித்திக்கும் என்றார்கள் ஒரு சிலபேர்..
தெவிட்டாது என்றார்கள் பற்பல பேர்..
எத்திக்கும் எனது பெயர் செழிக்குமென்றால்
எதற்காக எனை படிக்க மறந்து நின்றாய்?

சொக்கும் தமிழ் உனையாள வேண்டாமா?
சொல்வளமும் சிறப்புற வேண்டாமா?
பிறச்சொல்லை புகுத்தாதே எனக்குள்ளே
பாழாகி போவேன் நான் தரணியிலே..

எனது வழி தமிழனாய் பிறந்தவனே
எனது வம்ச வாரிசாய் வளர்ந்தவனே
எனை வளர்க்க மறந்த மானிடனே
எனை சுமக்க வெறுக்கும் வெறும்பயலே

நான்படும் வேதனைக்கு அளவில்லையே
நலங்குன்றி போவேனோ தெரியவில்லையே
நாடெங்கும் தேய்கின்றேன் நாதியில்லையே
நான் மடியும் நாட்களோ தூரமில்லையே

காப்புறுதி வேண்டி நான் நிற்கின்றேன் -எனை
கண்ணியமாய் காக்க வேண்டுகின்றேன்
காசு பணம் தேவையில்லை காவலுக்கு -எனை
காதலிக்க காப்பாற்ற மனமுண்டா?

No comments:

Post a Comment