Wednesday, September 15, 2010

காதலுக்கேதடா வயது???


மூதாட்டி:
பெற்றெடுத்த முத்துக்களை காணவில்லை
பெயர்காக்க ஒரு மலரும் பூக்கவில்லை
தள்ளாடும் வயதில் ஒரு தடியும் இல்லை
தளராமல் இருக்கும் மனம் எனக்குமில்லை..!

முதியவர்:
வாடுவதும் ஏனோ என் கண்ணே...
தேடுவதும் எதையோ என் பெண்ணே...
உன் மணவாளன் நானிருக்கேன் மணியே..
உன் மகனை மறந்து வா தனியே..

மூதாட்டி:
பெற்ற மனம் என்றுமே பித்தத்தான்
பெற்ற வலி என்றுமே எனக்குத்தான்
விட்டுவர கூவுதிங்கே இதழ்தான்
விம்மியழ ஏங்குமிங்கே மனம்தான் !

முதியவர்:
மணமுடித்த நாளே முடிவெடுத்தேன்
மரணம்வரை நான் உடனிருப்பேன்..
மாதரசி உன்னில் நான் கலந்திருப்பேன்
மார்போடு உன்னையே அணைத்திருப்பேன்

மூதாட்டி:
நரைத்த முடியும் நடுங்கும் உடலும்
நடவா காலும் நகைப்பது தெரியலையோ?
கிழடு தட்டியும் கிண்டலா உமக்கு?
கிட்டுமோ காதல் இவ்வயதில் நமக்கு?

முதியவர்:
அட அறியாமைக்குப் பிறந்தவளே
அறிந்துகொள்ளடி அன்பான என்னவளே
இனித்தான் காதல் கிட்ட வேண்டுமா?
இருபதில் கிட்டியதை மறைக்கலாகுமா?

நாற்பதிலும் காதல் நாற்றாங்காலிடும்
ஐம்பதிலும் கூட அகக்களிப்பு கூடும்
அறுபதிலும் நேசம் அழகாய்ப் பூக்கும்
எழுபதிலும் கூட மெதுவாக தாக்கும்

வம்பை காதலில் நுழைக்காமல் மோது
அன்பை செலுத்து கொண்டவர் மீது
சாதலுக்கே வயதில்லை எனும்போது
காதலுக்கேதடா வயதென்று ஓது

மூதாட்டி:
அடுத்தடுத்து உரைக்கின்றீர்
எடுத்தெடுத்து தொடுக்கின்றீர்
மடுத்தது என் செவிதானா???
தொடுத்தது உம் கவிதானா?

அழகாக காதலின் தெளிவுரைத்தீரே
அன்பாக எந்தன் கரம் பிடித்தீரே
காதல் கடனை எமக்களித்தீரே
கடன்காரியாய் எமை அவதரித்தீரே!

முதியவர்:
காதலியே நீ எனக்கு என்றுரைப்பேன்
கடன்காரியாக்கவா கருத்துரைத்தேன்
கன்னம் நனைய நான் காத்திருப்பேன்
காதலை உணர்த்தும்வரை பார்த்திருப்பேன்

மூதாட்டி:
வந்தேன் வந்தேன் காதல் சித்திரமே
தந்தேன் தந்தேன் காதல் முத்திரையே
தித்திக்கும் காதல் சின்னம்கொண்டே
எத்திக்கும் படரட்டும் நேசச்செண்டே!

முதியவர்:
மீட்டுப் பார்த்தேன் பழங்கதையை
மீண்டும் வீழ்ந்தேன் உன் வலையில்
மீள முடியாமல் உன் பிடியில்
மாள வேண்டுமே உன் மடியில்!

"முதுமை இருந்தது முகத்தினிலே புதுமை பிறந்தது அகத்தினிலே..!!"

Monday, July 19, 2010

அம்பலப்படுத்துவதடியோடு ஒழியட்டும்!!!


வீடெங்கும் தடபுடல் அமளியென அதிர்ந்திடவே
வீதியெங்கும் தோரணங்கள் தொங்கிச் சிரித்திடவே

வீடியோக்காரர்களும் வித விதமாய் படம்பிடிக்க
வீணான செலவுகள் எதற்கென்றே புரியவில்லை!

பதின்மூன்று வயதிலவன் பத்து "ஏ"க்கள் பெற்றிருந்தான்
பந்தலும் போடவில்லை பரிசுகளும் குவியவில்லை

பத்தே வயதுபெண் பருவம்தான் அடைந்துவிட்டால்
பட்டுப்புடவைகட்டி பலகாரங்கள் பல ஊட்டி

பத்திரப்படுத்துவாதாய் பதுக்கியேவைத்தார்கள்
பத்தியமானதாய் எதை எதையோ சொன்னார்கள்

ஆருமில்லா அறைதனிலே அவளை அமர்த்திட்டர்
ஆணியொன்றினையோ அவள்தலையில் செருகிட்டர்

அதற்கான காரணம் யாதென கேட்டிட்டால்
அமுக்கிப்போடும் பேயினை விரட்டவே என்றிட்டர்

ஆண்பாலும் பெண்பாலும் தெரிந்திருக்கு பேயுக்கு
அப்பெண்படும் பாடுத்தான் தெரிவது யாருக்கு?

அவளுக்கும் அண்ணனுக்கும் இடைவெளி கூடும்
அப்பனுக்கும்கூட அதேகதைத்தான் தொடரும்

விடியலதை எதிர்ப்பார்த்து குளியாட்ட வந்திடுவர்
விட்டப்பணம் பிடிக்க விழாவுக்கு வித்திடுவர்

விந்தையான கதைகளை வரம்பின்றி செப்பிடுவர்
விதிமுறைகள் பலவற்றை அவளுக்கு திணித்திடுவர்

அழகான அழைப்பிதழ்கள் ஆயிரம் அச்சிட்டு
அதற்கு மஞ்சளும் பூசி மங்கள நாள் பார்த்து

பூப்புனித நீராட்டு விழாவினை நிகழ்த்துகின்றார்
பூப்பெய்த கதையை பூரிப்பாய் மெச்சுகின்றார்

ஆசைவரும் அவளுக்கும் அறியாத வயதன்றோ?
அழுதே அடம்பிடிப்பாள் விழாவெடுக்க வேண்டுமென்று

ஆய்ந்துணர்க உறவுகளே அவசியமா இதுவெனவே
அசிங்கத்தை அவளுக்கு ஆழமாய் உணர்த்துகவே

மாமியார் சொல்லியதால் மதியிழந்து நிற்காதே
மாமன்காரன் வந்துவிட்டால் மாலைப்போடவிடாதே

சராசரியாய் வரும் சங்கதியாம் பெண்ணுக்கு
சாதனைப் படைத்ததுபோல் பிதற்றல்கள் எதற்கு?

வயதிற்கு வந்துவிட்டால் ஊரெல்லாம் சொல்லுவதும்
வாலிப நெஞ்சதனில் நஞ்சதனை புகுத்துவதும்

காணாத வளர்ச்சிகளை காட்ச்சிக்கு கொணர்வதுவும்
காமத்தை ஏற்றிவிடும் கடுஞ்செயலைக் கூட்டிவிடும்!!

மூடத் தனத்தினையே மென்மேலும் நாட்டிவிடும்
முடக்கிஒடுக்கிடவே பெண்ணியமும் தோல்வியுறும்

வெற்றான செயல்களை வெறுத்துநீ ஒதுக்கு
வெட்கிக் குனிந்திடும் காரியத்தை கவிழ்த்து

விஞ்ஞான வளர்ச்சியினால் மிளிரட்டும் அறிவு
வீணான சடங்குகளைத் தீயிட்டுக் கொளுத்து!!

அப்பக்கம் திரும்பேன்..!


அர்த்தமற்ற ஒன்று
வலுக்கட்டாயமாக பிய்த்துக்
குதறப்பட்டதை எண்ணியே
காலங்கள் கசக்க
கழிந்தன...

விதிப்படி...
விண்ணப்பங்கள் குவிய,
விரட்டும் உலகம்
துரத்தும் தூரமென
வெட வெடுத்து
ஓடலாயின
உணர்வலைகள்..!

விபத்துகள் பல கடந்து,
விம்மி விம்மியே அழுது,
வீழ்ந்து வீழ்ந்தே
கிழிந்து தொங்கி
நார் நாராய்
நசுக்கப்பட்ட இதயம்..
இனியும் வீழேனென
தாமாகவே தம்மை
புதைக்குழிக்குள் இருத்த
பழகிவிட்டிருந்தது..!

திட்டவட்டமாக
அப்பக்கம் திரும்பேன் என்ற
இதயம்தான்...
தொட்டவுடனே மறுக்காமல்
அப்பக்கம் சாய்ந்துக்கொண்ட
மரபு...
விளங்கப்படுத்தாமலேயே
விலக்கப்பட்டிருந்தது..!

வலிகள் தந்ததால்..
அன்று..
'அது' அசிங்கமானது..
அன்பை பொழிந்ததால்..
அதே 'அது' இன்று
அழகாகவே
அசிங்கப்பட்டிருந்தது!
ஆனாலும்,
அசிங்கமான அந்த அழகு,
இனி ஆரிடத்திலும்
பெறத்தக்கதன்று..!

அதனாலோ என்னவோ?
மாற்றார் கண்ணுக்கு
உறுத்தலாய்ப்பட்டது,
தோற்றுத் தோய்ந்த
உள்ளத்திற்கு
உரமாய்த் தரித்தது!

இதயம்..
அசிங்கம் பாராமல்
அன்பிற்குள் அமிழ்ந்து,
ஊன்றிப்போனது..!

நிரந்தரமில்லைதான்..
ஆனாலும்,
நிம்மதியான
நிமிடங்களுக்குள்
நீந்தத் தெரியாமல்
சாவதே மேலன்றோ?

இடம்தந்த
அன்புக்கூட்டிற்குள்
புது 'மன' புகு விழா!
அன்பே மையமாக
புதுவரவை
இன்பமாய் காத்தது..
தன்னிலை மறந்து
துன்பமும் வார்த்தது!

விசித்திர வசிப்பிடம்
அதில் வசித்திடல்
சுகம்..சுகம்..!

இதயத்தில்..
காயமில்லாமலே
கசிந்தது குருதி
நோகடிக்காமலே
நொடிந்தன ஆசைகள்!

தேங்கி நிரம்பிய
கண்ணீர் குளத்தில்
காகிதக் கப்பல்விட்டு
மகிழ்ந்தன நிராசைகள்!

"மீண்டும்..
அப்பக்கம்
திரும்பேன்
என்றன,
இரவல் இடத்தில்
இருந்த படியே..
இதயமும்
அதனோடிசையும்...
இழப்புகளும்..!

Monday, April 5, 2010

அழகிய ஓவியங்கள்!

தெவிட்டாத குரலினிலே குவிந்திடும் குதூகலங்கள்
தெம்பான பேச்சினிலே தென்படும் துணிச்சல்கள்
தத்தக நடையினிலே நவின்றிடும் நாட்டியங்கள்
தாவியோடும் ஓட்டத்திலே ஒழிந்திடும் ஓலங்கள்

வந்தாடும் வாய்ச்சிரிப்பில் வசந்தத்தின் தோரணைகள்
வழிந்தோடும் எச்சினிலே துச்சமாகும் துக்கங்கள்
பந்தாடும் பாவணையில் பலியாகும் பஞ்சங்கள்
பண்பாடும் பாசத்தில் இசையாகும் இம்சைகள்


இரசித்துப்பார்க்க என்னவி(ல்)லை சொல்லுங்கள்?
இலட்ச அலங்காரங்கள் அலைமோதும் அம்முகத்தால்
இரணங்கள் மறைந்தோடும் மாயம்தான் என்னவோ?
இரக்கம் இல்லாதோர் இதை மறந்ததென்னவோ?

குழந்தைப் பருவமெனும் மாபெரும் பரப்பினிலே
குசியும் கூத்தும் கும்மாளமும் வழிந்தோட
குறுகிய மனம்படைத்தார் வெறித்தனமாகவதை
குதறிப்போடுகின்றார் மனிதத்தை இழக்கின்றார்

ஆடியோடும் கால்களை உடைத்தே போடுகின்றார்
ஆனந்த கீதங்களைக் கிழித்தே எரிகின்றார்
சிகரெட்டால் அவர்களை தீய்த்தே விடுகின்றார்
சினத்தால் அவர்களை சித்திரவதைப் புரிகின்றார்

பால்குடிக்கும் வாய்களிலே பலநூற்றுக் காயங்கள்
பால்யத்தின் பருவத்திலே பற்பல பலாத்காரங்கள்
பாசமெனும் நூலெடுத்து அன்பதனைக் கோர்க்காமல்
பரிதவித்துச் சாகடித்தல் எங்கணம் முறையாகும்?


பிணமாக்கிப் போடத்தான் பெற்றெடுத்து விட்டீரோ?
பிரேதங்களாய் நாறத்தான் நசுக்கி சாய்த்தீரோ?
பிஞ்சுகளே அவர்களென சாற்றுவது எப்போது?
பிள்ளைகளின் மனதைத்தான் போற்றுவது எப்போது?

சூடுப்போட்டு தீய்க்க பண்டங்களா அவர்கள்?
சுண்டநீ காய்ச்ச திரவங்களா அவர்கள்?
சுக்குநூறாய் உடைகின்றார் மிருகமான உன்னால்
சுதந்திரமாய் விட்டுப்பார் உன் சுவசமாகிப்போவார்!

அழுகிய காயங்களை அடையாளமாய் தராதீர்
அழகிய ஓவியங்களை அசிங்கமும் செய்யாதீர்
சிறந்த காவியங்களை சிதைத்தும் விடாதீர்
சிறுமனம் படைத்தவரென ஒதுக்கியும் விடாதீர்

கூறுப்போட்டு சாய்க்க மாமிசங்களோ அவர்கள்?
குருதியைப் பிழிந்தெடுக்க விலங்குகளோ நீங்கள்?
பயத்தை விதைத்ததால் விதைத்ததென்ன நன்மை?
பாசத்தை செலுத்தினால் விளைந்திடுமோ தீமை?Thursday, March 4, 2010

மலேசியத் தமிழ் நாளிதழ்கள் -ஒரு சிறு ஆய்வு!!!!


“காரிருள் அகத்தில் நல்ல
கதிரொளி நீதான்! இந்தப்
பாரிடைத் துயில்வோர் கண்ணிற்
பாய்ந்திடும் எழுச்சி நீதான்!
ஊரினை நாட்ட இந்த
உலகினை ஒன்று சேர்க்கப்
பேரறி வாளர் நெஞ்சிற்
பிறந்த பத்திரிகைப் பெண்ணே!

அறிஞர்தம் இதய ஓடை
ஆழநீர் தன்னை மொண்டு
செறிதரும் மக்கள் எண்ணம்
செழித்திட ஊற்றி ஊற்றிக்
குறுகிய செயல்கள் தீர்த்துக்
குவலயம் ஓங்கச் செய்வாய்!
நறுமண இதழ்ப் பெண்ணேஉன்
நலம்காணார் ஞாலம் காணார்.”

என்று பாரதிதாசன், பத்திரிகையின் புகழினை அழகாக ஒப்புகின்றார். ஆனாலும், மலேசியா தமிழ் பத்திரிகைகள் இதற்கு சான்றாக செயல்படுகின்றனவா? அவை உண்மையிலேயே தமிழ் மக்களுக்கு ஒரு சிறந்த தகவல் ஊடகங்களாக விளங்குகின்றனவா? இது சற்று ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஆய்வாகவே உள்ளதென்றால் வியப்பதற்கில்லை! நாளிதழ்கள் என்றாலே நாள்தோறும் மக்களைச் சென்றடைய வேண்டிய ஒன்று என்றே சிலர் கருதுகின்றனர். "என்ன நடந்தாலும், இன்றைய பத்திரிகை பிரசுரிக்கப் பட்டுவிட்டது, எதிர்ப்பார்த்த இலாபம் கிட்டும்" என்ற எண்ணத்தில் மட்டுமே பத்திரிகைகள் வெளியிடப்படுமானால் அது வெட்கப்படத்தக்கதே. மலேசியா மண்ணைப் பொறுத்தமட்டில், தமிழ் நாளிதழ்களின் பங்கு பிற மொழி பத்திரிகைகளோடு ஒப்பிடுகையில் தரத்திலும் தகவல் வழங்குவதிலும் தரம் குன்றியே காணப்படுகின்றது என்பதும் மறுக்கப்படவியலாத உண்மையே.உதாரணத்திற்கு, வேலை வாய்ப்புகள் பற்றிய விளம்பரங்கள் பெற எல்லா இனத்தவர்களும் ஆங்கிலப் பத்திரிகைகளையே நாடுகின்றனர் . காரணம், நமது நாட்டில் மட்டுமல்லாது உலக அளவிலும் வேலை வாய்ப்புகளைப் பற்றிய பரந்த கண்ணோட்டத்தினை மக்கள் முன்னிலை கொணரும் தன்மையை அவைப் பெற்றிருக்கின்றன என்பதே.

அரசியல் சார்ந்த எல்லா தகவல்களையும் அவ்வப்போது மக்களுக்கு சரியாக வழங்கி வந்தாலும், ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியினைப் பற்றி ஆழமாக தெரிந்துக் கொள்ள விரும்பும் வாசகர்கள், குறிப்பிட்ட ஒரு பத்திரிகையையே வாங்கி தெளிந்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் மக்கள் மனதில் ஊடுருவி இருப்பது நாளிதழ்களுக்கிடையிலான பிரிவினையையும் சித்தரிக்கின்றது. இது இந்தக் கட்சியின் பத்திரிகை, அது அந்தக் கட்சியின் பத்திரிகை, இதுவோ நடுநிலைப் பத்திரிகை என்றெல்லாம் பத்திரிகைகளையே வகைப் படுத்தி இருக்கின்றார்கள். இவ்வெண்ணம், மக்களுக்கிடையிலேயும் பிரிவினையை நன்கு வளர்த்திருக்கின்றது.

ஆனாலும், நமது மண்ணின் மைந்தர்களின் திறமைகளையும் கலை ஆர்வத்தினையும் வெளிக்கொணரும் முக்கிய தளமாக சில தமிழ் நாளிதழ்கள் பங்காற்றி வருவது பாராட்டிற்குரியதே. மேலும், நமது நாட்டில் சில அரும் பெரும் தமிழ் நெஞ்சங்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுவரும் தமிழ் நிகழ்வுகளை விளம்பரப்படுத்தி, பொது மக்கள் அது போன்ற நிகழ்வுகளில் தங்களை ஈடுப்படுத்திக் கொள்ள உந்து சக்தியாக இருந்தும் வருகின்றது. மாணவர்களுக்கான பக்கங்கள், வேலை வாய்ப்பு சம்பந்தப்பட்ட விளம்பரத் தகவல்கள், மகிளிருக்கான பயனுள்ள பகிர்வுகள், மக்கள் மனதில் தோன்றும் ஓலங்கள், வாசகர் படைப்புகள் போன்றவை அச்சிடப்படுவது மனதை மகிழ்வுற வைக்கின்றது.

இருப்பினும், எமது கேள்வியெல்லாம்,இது போன்ற செய்திகளும் அறிக்கைகளும் தினந்தோறும் இடம்பெறுகின்றனவா? நாளிதழ்கள் என்பன நாள்தோறும் மக்களை பயனுள்ள விடயங்களுக்குள் ஆழப்படுத்த வேண்டாமா? மக்கள் படைப்புகளைக் காண வேண்டுமாயின், ஞாயிறு இதழ்கள் கைக்குள் இருந்தாலே போதுமென்ற அசைக்க முடியாத எண்ணம் நம்முள் வேரூன்றி இருக்கிறதே? இந்த நிலையை மாற்றும் தன்மை பத்திரிகையாளர்களிடமே இருக்கின்றது என்பது வெள்ளிடைமலை.

நடிகைகளின் கவர்ச்சிப் படங்களை பெரிய அளவிலும் கவர்ச்சிகரமானதாகவும் வெளியிடும் பத்திரிகைகள், மாணவர் படைப்புகளையும் வாசகர் படைப்புகளையும் வெறும் கருப்பு வெள்ளையில் பிரசுரித்து காட்டுவது வேதனைக்குரியது. மேலும், குட்டி குட்டி பெட்டிகளுக்குள் முக்கிய தகவல்களை அச்சிட்டு மேலும் இந்த சமுதாயத்தை ஒரு கட்டத்திற்குள்ளேயே நாளிதழ்கள் இயங்கச் செய்கின்றன. இன்று நிகழ்ந்த ஒரு சம்பவத்தை இங்கு பகிர்ந்தே ஆகவேண்டும். எதுவுமே இல்லாத அந்த நித்தியானந்தாவின் செய்தியை முன்பக்கத்திலும் பின் பக்கத்திலும் முழுக்க முழுக்க வர்ணத்தில் ஆபாசம் என்றும் பாராமல் அச்சிட்டது ஒரு தாய் தன் மகளின் முன்னிலையில் நாளிதழினை ஒழித்துப் படிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் ஆழ்த்தியதை கண்கூடாகப் பார்த்த நொடிகளில், மலேசிய நாளிதழ்கள் எதை நோக்கிச் செல்கின்றன என்பதை எம்மால் கண்டுகொள்ளவே இயலவில்லை. கழிவறைகளில் ஒழித்துப் படிக்கப்படும் இழிவான இதழ்களின் நிலையிலா நமது நாளிதழ்கள் இருத்தப்படுகின்றன? இவர்களின் இது போன்ற செயலாக்கங்கள், பணம் ஒன்றே நோக்கமாக நமது நாளிதழ்கள் பிரசுரிக்கப்படுகின்றன என்பதினை உள்ளங்கையில் நெல்லிக் கனிபோல் தெள்ளத் தெளிவாக தெரியப்படுத்துகின்றன.

மேல் குறிப்பிட்டது போல, சாமியார்களின் அட்டூழியங்களையும் நடிகைகளின் ஒழுக்கக்கேடான செயல்களை பற்றியும் நாளிதழ்களில் வெளிக்கொணர்வது தவறு என்று குற்றம் சாடவில்லை. ஆனாலும், அது போன்ற செய்திகள் மக்களுக்கு எவ்வகையில் பயன் அளித்தன? "குறிப்பிட்ட நடிகை மீது நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்குமா?" என்ற கேள்விக்கு பதிலாக "இனியும் மக்கள் இதுபோன்ற சாமியார்களை நம்புவார்களா?" என்று வினா எழுப்பி இருந்தால், நிச்சயமாக அது மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கும் அல்லவா? "விழிப்புணர்வு" ஆம், இதுதான் நாளிதழ்களின் தலையாய பங்கு. அதை நாளிதழ்கள் செவ்வனே செய்து வருகின்றனவா? இன்று இது போன்ற திடுக்கிடும் தகவல்களைப் பிரசுரித்த இதே நாளிதழ்கள் தாம் ஏற்கனவே "பிரபல xxxxxxxx சாமியார் மலேசிய வருகை", “உடனே ஆசிப் பெற்றுக் கொள்ளுங்கள்!”, “அம்மாவின் அமுத தீர்த்தம் பெற இன்றே முந்துங்கள்!!”, “ஆசி பெற காசி வரை போக வேண்டாம்!” என்றெல்லாம் வார்த்தைகளை அழகாக கோர்த்து எம் மக்களிடையே தவறான எண்ணங்களைப் புகுத்தியது என்றால் மறுப்பார் உண்டோ?

தினம் தினம் வன்முறையால், "கொலை வெறி" எனும் நோயால் படுத்த படுக்கையாய் பகுத்தறிவை இழந்தவனாய் வாழும் எம்மின இளைஞர்களுக்கு வழிப்புணர்வை கொண்டு வராமல், அந்த கொலையையும் கொடூரக் காட்சிகளையும் படம் போட்டுக் காட்டுவதை நிறுத்த வேண்டும். அந்த கொலை எப்படி நடந்தது என்று நேரில் நின்றுப் பார்த்த சாட்சியினைப்போல் வர்ணித்து எழுது வதையும் வன்மையாக கண்டிக்கிறேன். காலப்போக்கில், இவர்களே "கொலை செய்வது இப்படித்தான்" என செய்திகள் வெளியிட்டாலும் வியப்பதற்கில்லை! திருத்துங்கள். திருத்த முயற்சியாவது செய்யுங்கள். ஆனால், நீங்களே தூண்டுகோளாகிவிடாதீர்கள்!! பட்டம் பெரும் பட்டதாரிகளின் படங்களையும், சிறந்த தேர்ச்சிப் பெற்ற மாணவர்களின் படங்களையும் இலவசமாக அச்சிடுவது அற்புதமான செயல். ஆனால், அவற்றை பெரிய அளவுகளில் அச்சிட்டு, பிற மாணவர்களுக்கு ஊக்குவிப்பாக அமையும் வண்ணம் வார்த்தைகளை அலங்கரியுங்கள். அது அவசியமானது.!!!

சில பத்திரிகையாளர்களுடன் ஏற்பட்ட நட்பில் மேலும் சில தகவல்களையும் நான் பெற்றுக் கொண்டேன். இன்றைய சில பத்திரிகை எழுத்தாளர்கள் தமிழில் நன்கு எழுதப் படிக்கத் தெரியும் என்ற தகுதியைத் தவிர வேறு எந்த தகுதியும் அற்றவர்களாவர். சில திரைப்படங்களில் குறிப்பிட்டது போல, சில செய்திகள் தி.ஆர். இராஜந்திரனின் வசனங்கள் போல சந்தங்கள் நிறைந்தவையாக இருப்பது சிரிக்க செய்தாலும் சிந்திக்கவும் செய்கின்றன. இவர்களின் இந்த செயல்,முக்கியமான செய்திகளையும், எண்ணங்களைச் சிந்திக்கத் செயல்படத் தூண்டும் செய்திகளையும், பகுத்தறிவிற்கு பாதை வகுக்கும் பகிர்வுகளையும், கவலைக்கிடமான விடயங்களையும் கூட நகைச்சுவையாக மாற்றும் தன்மை வாய்ந்தவை என்பதை ஏனோ அவர்கள் நினைவுக்கூற தவறுகிறார்கள்?

அதைவிட வருத்தத்தில் ஆழ்த்தும் கதை ஒன்று உண்டு. முன்பெல்லாம், மக்களுக்கு பயனான செய்திகளைத் தர வேண்டுமென்ற நோக்கத்தில் அங்கும் இங்கும் வியர்வை சிந்தி உழைத்த பத்திரிக்கையாளர்கள் இருக்க, இப்பொழுதெல்லாம், செல்வந்தர்களுக்கெனவே சேவை செய்யும் பத்திரிகை நிருபர்களும் இருக்கின்றனர். கிடைக்கும் வருமானத்தை விட, மேலும் பணத்தொகையினை ஈட்டுவதற்காக அச்செல்வந்தர்களைப் பற்றிய செய்திகளையே அதிகமாக வெளியிட அவர்கள் அரும்பாடுபடுகின்றனர். ஒரு குறிப்பிட நபரின் படம் பக்கத்திற்கு பக்கம் தவறாமல் வருகின்றதென்றால், அதற்கு பின்னால் யாரோ ஒரு பத்திரிக்கையாளர் தொண்டனாகவோ, அவர் தரும் பணத்திற்கு அடிமையாகவோ செயல்பட கூடும்.

பத்திரிகையாளர்கள் உலகில் நடந்துவரும் எல்லா நிகழ்வுகளையும் கண்காணித்து வருவது அவசியம். ஏனெனில், நாளிதழ்கள் பலரின் பொது அறிவுப்பெட்டகத்தினைத் திறந்து வைக்கும் திறவுகோள்களாகும் . நாளிதழ்களில் என்ன பிரசுரிக்கப்படுகின்றதோ, அதை அப்படியே அச்சுப்பிசகாமல் நம்புபவர்களும் பின்பற்றுபவர்களும் நம்மில் எண்ணிலடங்காதோர் உண்டு. அவர்களை எல்லாம் சீர்தூக்கிப் பார்ப்பது பத்திரிகைகளின் இன்றியமையா கடமை என்பதினையும் நினைவில் கொள்க.

நாளிதழ்கள் எம்மினத்தின் நாடி!! அதை சீராக இயக்குவது அத்தியாவசியமானது..! இதை உணர்ந்து நாளிதழ்கள் இயங்கவேண்டும். எம் மக்களை சீரான பாதையில் இயக்க வேண்டும். பெரியவர் முதல் சிறியவர் வரை, அனைவரிடத்தும் நாளிதழ் வாசிக்கும் பழக்கத்தை பிறப்பிக்கச் செய்த பின்னர், நாளிதழ்களைப் புரட்டுகையில்.. வெற்றுக் காகிதத்தைப் படிக்கிறோமோ என்ற எண்ணத்தை மட்டும் அவர்களிடையே ஊற்றெடுக்க செய்துவிடக்கூடாது!மக்களின் அறிவுப்பசியினை அவ்வப்போது நிறைவு செய்வதே நாளிதழ்களின் சேவையாகும்! விளம்பரத்திற்காகவோ, விமர்சனத்திற்காகவோ, வியாபாரத்திற்காகவோ நாளிதழ்கள் இயங்க கூடாது. அறிவிற்கு விருந்தாக அவை திகழ வேண்டும்!!

Friday, February 5, 2010

அன்பிற்கினிய முகநூலுக்கு...


முக நூலில் எழுதலாமென்று ...
முக நூலுக்காய் எழுதுகிறேன்...!

முகம்தெரியா எங்களை எங்கணம்
முகவரியிட்டுப் பிடித்தாய் நீதான்?!

அன்பாலே அணைக்கும் ஓர் அன்பரை
அசையாமல் எனக்குள்ளே இருத்திவிட்டாய்!
(Thaya)

அழுதால் துடைக்கும் ஓர் அண்ணனை..
அவசியமாய் செயல்பட ஆணையிட்டாய்!
(Gobi Na)

தவறிழைக்கும் தடயம் தென்பட்டால்
தண்டிக்க தமக்கையையும் தரிசித்தாய்!
(Manchu Akka)

கலைக்குச் சிகரமான ஓவியரை
சிலையாய் மனதிற்குள் புகுத்திட்டாய்!
(Pr Rajan)

காலத்தோடு பதிவு பல போட்டிடினும்
காலம் தாழ்த்தாது கருத்து கேட்க
கணக்கில்லா கேள்விகளுடன்
கண்ணுக்குமுன் நிற்கும் நண்பரையும்..
(Prashanthan Thurairaja)

நயமாக நகைப்பூட்டி சிரிக்கையிலே சிந்தனையூட்டி
கலையான காவியத்தை ஒவியாமாக்கிவிட்டு
குறும்போடு பேசிடும் குழந்தையையும்
(Senthu)

வேடிக்கை செய்வதையே வாடிக்கையாய்க் கொண்டு
வற்றாத தமிழோடு வசீகர வார்த்தையோடு
வளம் பெரும் வாலிபன் ஒருவனையும்-அவனோடு
வம்புக்கும் வழக்கிற்கும் வாய்ச்சண்டைக்கும்
வரிசையாய் வலைவீசும் வஞ்சி ஒருத்தியையும்
வளைத்துக் காட்டிட்டாய் நீ எனக்கு!!
(Vimalathithan & Nila)

கவலையாய் கரைந்தோடிய நதியானவளை
கல கலவெனச் சிரிக்கும் கடலாய்ப் பெருக்கி
கருத்துகளை அவளிடத்தில் கசியவிட்டு
கனிவானத் தங்கையாக காட்டிவிட்டாய்!!
(Mayoo Mano)

நட்பாய் நான்கு வார்த்தை பேசவும்
நறுக்கென நானூறு முறைத் திட்டவும்..
நலமான உறவை நாடவும்..
நங்கூரமாய் மனதிற்குள்
நயமாய் பதிந்துவிட்ட நண்பனின்
நட்புக்கு வழி தந்ததும் நீதான்!!
(Prashanthan Vilvarajah)

அளவில்லாமல் சிரித்ததுண்டு
அசிங்கமாக அழுததுண்டு
ஆனால்.. மகிழ்ந்து மகிழ்ந்தே
அசந்துப்போன கதை அறிவீரா?
அப்படி ஒரு மகிழ்வு மனதில்!
அப்படி ஒரு நெகிழ்வு நெஞ்சில்!

முகநூலே...

அனைத்தையுமே அளித்திட்டாய் நீ எமக்கு!
அவற்றை அழியாமல் பார்ப்பதே எம் கணக்கு!

Sunday, January 31, 2010

விவாகரத்து!


காதலித்தார்கள்..
கரம் பிடித்தார்கள்...
கவலையின்றி...
கரை சேர்ந்தார்கள்..!

இது இயல்பு வாழ்க்கை...

இருமனம் இணைந்து...
திருமணம் முடிந்து..
கணம் கணம் கடிந்து...
வனம் போல முடிந்தால்...

அது என்ன வாழ்க்கை?

ஈன்ற பிஞ்சுகளின்
ஈர விழிகளுக்கும்...
பார மனதிற்கும்..
கோர வாழ்க்கை ஏன்?

பத்து பேர் முன்னிலையில்..
முத்து முத்தாய் சிதறிய
ரத்து செய்யப்பட்ட உறவு
செத்து தொலைந்துவிட்ட மகிழ்வு!!

ஒரு நாள் தகப்பனோடு
மறுநாள் தாயோடு..
இன்னொரு நாள் துயரத்தோடு..
ஒவ்வொரு நாளுமே துக்கத்தோடு..!!

பந்தாடும் அலைச்சல் ஒரு பக்கம்..
வந்தாடும் உளைச்சல் ஒரு பக்கம்...
இசைப்பாடும் இரைச்சல் ஒரு பக்கம்..
பாடு படும் மனம்தான் எப்பக்கம்???

Thursday, January 21, 2010

புதைக்குழிக்குள் நாங்களா???


செத்துத் தொலைய வேண்டுமாயின்
தொலைந்துப்போ!!!
மடிந்து மண்ணோடு
மண்ணாக வேண்டுமாயின்
மடிந்துப்போ!!!
பேருந்தில்.. மகிழுந்தில்..
சாலையில்.. சோலையில்..
காலையில் மாலையில்..
எத்திக்கிலும் நீ...!!
எங்குப்பாரினும் நீ..!!
எவ்வேளையும் நீ...!!
எமனவனை உன் கரத்தில்
எதற்காக ஏந்திட்டாய்?
எவர்எவர் வாழ்வையெல்லாம்
ஏனோ அழித்திட்டாய்?
தவறிழைக்கா நாங்கள் ஏன்
தண்டிக்கப்பட்டோம்?
வாழத்துடிக்கும் நாங்கள் ஏன்
வாழ்விழந்து நின்றோம்?
புகைப்பவன் நீ
புதைக்குழிக்குள் நாங்களா?
சிந்தியுங்கள்!!
புண்ணாகிப்போவது உங்கள் உருபென்றால்,
மண்ணாகிப்போவது எங்கள் மரபன்றே??
புகைப்பதை நிறுத்துங்கள்-என்றும்
புகையா மனிதரை சாம்பலாக்காதீர்!!

Monday, January 18, 2010

முயலும் மயிலும்...


வஞ்சி ஒருத்தி வண்ணமலர்ச் சோலையிலே
அன்ன நடைப்பின்னிக்கொண்டு
அசைந்தாடி நடக்கையிலே
காளையொருத்தன் முயலொன்றைப்பிடித்து
கயல்விழியாள் அவள் பின்னே
காரியமாய் ஓடவிட்டு

மூலை முடுக்கெல்லாம்
முயலதுவை பிடிப்பதான பிதற்றலோடு
மூச்சுமுட்ட முடக்கிட ஓடுகையில்
நிழலதுவைக் கண்டுவிட்டு
நிசப்தத்தில் ஆழ்ந்துவிட்டு
நிஜமதனைக் கண்டறிய
நிறுத்தி நின்றுப் பார்த்திட்டுப்பின்
சினம்கொண்ட அச்சிங்காரி அவனிடத்தில்
சிடு சிடுவென சீறிவிட்டு அங்கணமே
எதற்காக எனைத்துரத்தி வருகின்றீர் வாலிபரே?
எவ்வெண்ணம் ஈடேற தவிக்கின்றீர் சொல்வீரே
என்றவளோ ஏற்றமிகு குரலுடன் வினவிடவே

மயிலுன்னைத் துரத்தவில்லை எந்தன்
முயலதுவைத் துரத்தி வந்தேன்
அதன் பாதம்பட புற்களெல்லாம் பூரித்துப்போனதுவே
அது நுகர்ந்திட்ட மலரெல்லாம் மயங்கி வீழ்ந்ததுவே
அதன் பஞ்சான மேனியது என் நெஞ்சதனை
ஆழமாய் அசைத்திட்ட மாயமது யாதென
அவசியமாய் அறிந்திடவே துரத்துகின்றேன்
என் மயிலை..சீச்சீ என் முயலை
என்றவனோ உரைத்திடவே

உளறாமல் உளறுகின்றாய் -அதனூடே
உரசாமல் உரசி நிற்கும்
உண்மையையும் உணர்ந்துக்கொண்டேன்
ஊதியம் கிடைக்க வேலைக்குப் போகாமல்
ஊரெல்லாம் ஊதாரியாய் திரிந்துவிட்டால்
உந்தன் முயலது ஓடாமல் என்ன செய்யும்?
உழைத்திடுக பின்பு உணர்த்திடுக -அதன்பின்
வீதியெல்லாம் வியர்வைக்கொட்ட ஓடவேண்டாம்
வீடோடு வந்திடுமே உந்தன் மயில் சீச்சீ முயலென்றாள்

இதுகூட தெரியாமல்
இத்தனை நாட்கள்
இம்முயலைத் துரத்தியது
இடைவெளியை இணைக்கவில்லை!
இனி இன்னா செய்தாலும்
இனிமையான என்முயலை
இமைக்குள்ளே காத்திடுவேன்
இதயத்தில் பார்த்திடுவேன்
உத்தரவு பெருமுன்னே
உத்தரவாதம் அளித்திட்டால்
உள்ளமது சுவாசிக்கும்
உறவென்று யாசிக்கும்
கிட்டுமோ கிட்டாதோ
எட்டுமோ எட்டாதோவென
கிரகிக்க முடிந்திடுமே
சிறகுகளும் விரிந்திடுமே
எப்படி என் மயிலே சீச்சீ என் முயலே
என்றவனோ ஏவலிட

முயலதுவை மணப்பதென்றால்
முயன்றுத்தான் பாருங்களேன்
மயிலென்னை மணப்பதென்றால்
மனைக்குத்தான் வாருங்களேன்
யாரை ஏமாற்ற இங்கு
யாசகம் தொடுக்கின்றீர்?
யாவும் நானறிவேன்
யாதுமாய் நானிருப்பேன்
நாளைய பொழுதுக்காய்
நான் ஏங்கிக் காத்திருப்பேன்
நாதசுவர ஒசைக்காய்
நாளெல்லாம் பார்த்திருப்பேன்
வாழ்வுக்கு வலைவிரிக்க
வருவீரோ மாட்டீரோ
வாலிபரே சொல்கவென்றாள்

வெட்கமதைத் தள்ளிவிட்டு
வெகுளியாய் சொல்லிவிட்டாய்
வெறுமனே விட்டுப்போக
வெறும்பயல் நானன்றே
விடியலது எங்கேயோ
விரைந்து அது வாராதோ?
விண்ணைத்தான் பிளந்து
விடியவைக்க இயன்றிடுமோ?
வஞ்சி உந்தன் கரம்பற்ற நான்
வாஞ்சையோடு வீற்றிருக்க
வாடாதே வருந்தாதே
வருவேன் நான் வாழ்வளிக்க

சொன்னவரைப் போதுமத்தான்
சோகக்கதை நமக்கேது?
சொல்லாமல் வந்துவிட்டேன்
தாயவளோ வஞ்சிடுவாள்
நாளைவரும் மாலையென
நானிருப்பேன் அறிந்திடுக
நாமாகிப் போகும் காலம்
நன்றாக நல்கிடுக!

பத்திரமாய்ப் போய் வா
என் கண்ணே என் அமுதே
நாளை பக்குவமாய் நம் கதையை
நான் உரைப்பேன் உன் தாய்க்கே
போகும்முன் பாவை நீ பாராயோ என்னை?
பரிசாக எனக்குத்தான் தாராயோ ஒன்றை?

அவளோ "போங்கள்" எனச்
சொல்லி ஓடிடவே
அவனோ வேண்டுமெனச்
சொல்லித் துரத்துகின்றான்
முயலையல்ல..அம்மயிலைத்தான்!