Monday, January 18, 2010

முயலும் மயிலும்...


வஞ்சி ஒருத்தி வண்ணமலர்ச் சோலையிலே
அன்ன நடைப்பின்னிக்கொண்டு
அசைந்தாடி நடக்கையிலே
காளையொருத்தன் முயலொன்றைப்பிடித்து
கயல்விழியாள் அவள் பின்னே
காரியமாய் ஓடவிட்டு

மூலை முடுக்கெல்லாம்
முயலதுவை பிடிப்பதான பிதற்றலோடு
மூச்சுமுட்ட முடக்கிட ஓடுகையில்
நிழலதுவைக் கண்டுவிட்டு
நிசப்தத்தில் ஆழ்ந்துவிட்டு
நிஜமதனைக் கண்டறிய
நிறுத்தி நின்றுப் பார்த்திட்டுப்பின்
சினம்கொண்ட அச்சிங்காரி அவனிடத்தில்
சிடு சிடுவென சீறிவிட்டு அங்கணமே
எதற்காக எனைத்துரத்தி வருகின்றீர் வாலிபரே?
எவ்வெண்ணம் ஈடேற தவிக்கின்றீர் சொல்வீரே
என்றவளோ ஏற்றமிகு குரலுடன் வினவிடவே

மயிலுன்னைத் துரத்தவில்லை எந்தன்
முயலதுவைத் துரத்தி வந்தேன்
அதன் பாதம்பட புற்களெல்லாம் பூரித்துப்போனதுவே
அது நுகர்ந்திட்ட மலரெல்லாம் மயங்கி வீழ்ந்ததுவே
அதன் பஞ்சான மேனியது என் நெஞ்சதனை
ஆழமாய் அசைத்திட்ட மாயமது யாதென
அவசியமாய் அறிந்திடவே துரத்துகின்றேன்
என் மயிலை..சீச்சீ என் முயலை
என்றவனோ உரைத்திடவே

உளறாமல் உளறுகின்றாய் -அதனூடே
உரசாமல் உரசி நிற்கும்
உண்மையையும் உணர்ந்துக்கொண்டேன்
ஊதியம் கிடைக்க வேலைக்குப் போகாமல்
ஊரெல்லாம் ஊதாரியாய் திரிந்துவிட்டால்
உந்தன் முயலது ஓடாமல் என்ன செய்யும்?
உழைத்திடுக பின்பு உணர்த்திடுக -அதன்பின்
வீதியெல்லாம் வியர்வைக்கொட்ட ஓடவேண்டாம்
வீடோடு வந்திடுமே உந்தன் மயில் சீச்சீ முயலென்றாள்

இதுகூட தெரியாமல்
இத்தனை நாட்கள்
இம்முயலைத் துரத்தியது
இடைவெளியை இணைக்கவில்லை!
இனி இன்னா செய்தாலும்
இனிமையான என்முயலை
இமைக்குள்ளே காத்திடுவேன்
இதயத்தில் பார்த்திடுவேன்
உத்தரவு பெருமுன்னே
உத்தரவாதம் அளித்திட்டால்
உள்ளமது சுவாசிக்கும்
உறவென்று யாசிக்கும்
கிட்டுமோ கிட்டாதோ
எட்டுமோ எட்டாதோவென
கிரகிக்க முடிந்திடுமே
சிறகுகளும் விரிந்திடுமே
எப்படி என் மயிலே சீச்சீ என் முயலே
என்றவனோ ஏவலிட

முயலதுவை மணப்பதென்றால்
முயன்றுத்தான் பாருங்களேன்
மயிலென்னை மணப்பதென்றால்
மனைக்குத்தான் வாருங்களேன்
யாரை ஏமாற்ற இங்கு
யாசகம் தொடுக்கின்றீர்?
யாவும் நானறிவேன்
யாதுமாய் நானிருப்பேன்
நாளைய பொழுதுக்காய்
நான் ஏங்கிக் காத்திருப்பேன்
நாதசுவர ஒசைக்காய்
நாளெல்லாம் பார்த்திருப்பேன்
வாழ்வுக்கு வலைவிரிக்க
வருவீரோ மாட்டீரோ
வாலிபரே சொல்கவென்றாள்

வெட்கமதைத் தள்ளிவிட்டு
வெகுளியாய் சொல்லிவிட்டாய்
வெறுமனே விட்டுப்போக
வெறும்பயல் நானன்றே
விடியலது எங்கேயோ
விரைந்து அது வாராதோ?
விண்ணைத்தான் பிளந்து
விடியவைக்க இயன்றிடுமோ?
வஞ்சி உந்தன் கரம்பற்ற நான்
வாஞ்சையோடு வீற்றிருக்க
வாடாதே வருந்தாதே
வருவேன் நான் வாழ்வளிக்க

சொன்னவரைப் போதுமத்தான்
சோகக்கதை நமக்கேது?
சொல்லாமல் வந்துவிட்டேன்
தாயவளோ வஞ்சிடுவாள்
நாளைவரும் மாலையென
நானிருப்பேன் அறிந்திடுக
நாமாகிப் போகும் காலம்
நன்றாக நல்கிடுக!

பத்திரமாய்ப் போய் வா
என் கண்ணே என் அமுதே
நாளை பக்குவமாய் நம் கதையை
நான் உரைப்பேன் உன் தாய்க்கே
போகும்முன் பாவை நீ பாராயோ என்னை?
பரிசாக எனக்குத்தான் தாராயோ ஒன்றை?

அவளோ "போங்கள்" எனச்
சொல்லி ஓடிடவே
அவனோ வேண்டுமெனச்
சொல்லித் துரத்துகின்றான்
முயலையல்ல..அம்மயிலைத்தான்!

No comments:

Post a Comment