
அர்த்தமற்ற ஒன்று
வலுக்கட்டாயமாக பிய்த்துக்
குதறப்பட்டதை எண்ணியே
காலங்கள் கசக்க
கழிந்தன...
விதிப்படி...
விண்ணப்பங்கள் குவிய,
விரட்டும் உலகம்
துரத்தும் தூரமென
வெட வெடுத்து
ஓடலாயின
உணர்வலைகள்..!
விபத்துகள் பல கடந்து,
விம்மி விம்மியே அழுது,
வீழ்ந்து வீழ்ந்தே
கிழிந்து தொங்கி
நார் நாராய்
நசுக்கப்பட்ட இதயம்..
இனியும் வீழேனென
தாமாகவே தம்மை
புதைக்குழிக்குள் இருத்த
பழகிவிட்டிருந்தது..!
திட்டவட்டமாக
அப்பக்கம் திரும்பேன் என்ற
இதயம்தான்...
தொட்டவுடனே மறுக்காமல்
அப்பக்கம் சாய்ந்துக்கொண்ட
மரபு...
விளங்கப்படுத்தாமலேயே
விலக்கப்பட்டிருந்தது..!
வலிகள் தந்ததால்..
அன்று..
'அது' அசிங்கமானது..
அன்பை பொழிந்ததால்..
அதே 'அது' இன்று
அழகாகவே
அசிங்கப்பட்டிருந்தது!
ஆனாலும்,
அசிங்கமான அந்த அழகு,
இனி ஆரிடத்திலும்
பெறத்தக்கதன்று..!
அதனாலோ என்னவோ?
மாற்றார் கண்ணுக்கு
உறுத்தலாய்ப்பட்டது,
தோற்றுத் தோய்ந்த
உள்ளத்திற்கு
உரமாய்த் தரித்தது!
இதயம்..
அசிங்கம் பாராமல்
அன்பிற்குள் அமிழ்ந்து,
ஊன்றிப்போனது..!
நிரந்தரமில்லைதான்..
ஆனாலும்,
நிம்மதியான
நிமிடங்களுக்குள்
நீந்தத் தெரியாமல்
சாவதே மேலன்றோ?
இடம்தந்த
அன்புக்கூட்டிற்குள்
புது 'மன' புகு விழா!
அன்பே மையமாக
புதுவரவை
இன்பமாய் காத்தது..
தன்னிலை மறந்து
துன்பமும் வார்த்தது!
விசித்திர வசிப்பிடம்
அதில் வசித்திடல்
சுகம்..சுகம்..!
இதயத்தில்..
காயமில்லாமலே
கசிந்தது குருதி
நோகடிக்காமலே
நொடிந்தன ஆசைகள்!
தேங்கி நிரம்பிய
கண்ணீர் குளத்தில்
காகிதக் கப்பல்விட்டு
மகிழ்ந்தன நிராசைகள்!
"மீண்டும்..
அப்பக்கம்
திரும்பேன்
என்றன,
இரவல் இடத்தில்
இருந்த படியே..
இதயமும்
அதனோடிசையும்...
இழப்புகளும்..!
No comments:
Post a Comment