Monday, April 5, 2010

அழகிய ஓவியங்கள்!

தெவிட்டாத குரலினிலே குவிந்திடும் குதூகலங்கள்
தெம்பான பேச்சினிலே தென்படும் துணிச்சல்கள்
தத்தக நடையினிலே நவின்றிடும் நாட்டியங்கள்
தாவியோடும் ஓட்டத்திலே ஒழிந்திடும் ஓலங்கள்

வந்தாடும் வாய்ச்சிரிப்பில் வசந்தத்தின் தோரணைகள்
வழிந்தோடும் எச்சினிலே துச்சமாகும் துக்கங்கள்
பந்தாடும் பாவணையில் பலியாகும் பஞ்சங்கள்
பண்பாடும் பாசத்தில் இசையாகும் இம்சைகள்


இரசித்துப்பார்க்க என்னவி(ல்)லை சொல்லுங்கள்?
இலட்ச அலங்காரங்கள் அலைமோதும் அம்முகத்தால்
இரணங்கள் மறைந்தோடும் மாயம்தான் என்னவோ?
இரக்கம் இல்லாதோர் இதை மறந்ததென்னவோ?

குழந்தைப் பருவமெனும் மாபெரும் பரப்பினிலே
குசியும் கூத்தும் கும்மாளமும் வழிந்தோட
குறுகிய மனம்படைத்தார் வெறித்தனமாகவதை
குதறிப்போடுகின்றார் மனிதத்தை இழக்கின்றார்

ஆடியோடும் கால்களை உடைத்தே போடுகின்றார்
ஆனந்த கீதங்களைக் கிழித்தே எரிகின்றார்
சிகரெட்டால் அவர்களை தீய்த்தே விடுகின்றார்
சினத்தால் அவர்களை சித்திரவதைப் புரிகின்றார்

பால்குடிக்கும் வாய்களிலே பலநூற்றுக் காயங்கள்
பால்யத்தின் பருவத்திலே பற்பல பலாத்காரங்கள்
பாசமெனும் நூலெடுத்து அன்பதனைக் கோர்க்காமல்
பரிதவித்துச் சாகடித்தல் எங்கணம் முறையாகும்?


பிணமாக்கிப் போடத்தான் பெற்றெடுத்து விட்டீரோ?
பிரேதங்களாய் நாறத்தான் நசுக்கி சாய்த்தீரோ?
பிஞ்சுகளே அவர்களென சாற்றுவது எப்போது?
பிள்ளைகளின் மனதைத்தான் போற்றுவது எப்போது?

சூடுப்போட்டு தீய்க்க பண்டங்களா அவர்கள்?
சுண்டநீ காய்ச்ச திரவங்களா அவர்கள்?
சுக்குநூறாய் உடைகின்றார் மிருகமான உன்னால்
சுதந்திரமாய் விட்டுப்பார் உன் சுவசமாகிப்போவார்!

அழுகிய காயங்களை அடையாளமாய் தராதீர்
அழகிய ஓவியங்களை அசிங்கமும் செய்யாதீர்
சிறந்த காவியங்களை சிதைத்தும் விடாதீர்
சிறுமனம் படைத்தவரென ஒதுக்கியும் விடாதீர்

கூறுப்போட்டு சாய்க்க மாமிசங்களோ அவர்கள்?
குருதியைப் பிழிந்தெடுக்க விலங்குகளோ நீங்கள்?
பயத்தை விதைத்ததால் விதைத்ததென்ன நன்மை?
பாசத்தை செலுத்தினால் விளைந்திடுமோ தீமை?



5 comments:

  1. புன்னகைக்க வைத்தால்
    அவர்கள் அழகான பூக்கள்
    கண்ணீருக்குள் புதைத்தால் அது
    கருகிய மொட்டுக்கள்
    உள்ளத்தை திறந்தால்
    கோவிலாகும் குறும்புகள்
    இதயத்தை வதைத்தால் அதுவே
    குற்றமாகும் குறும்புகள்

    வதைக்காதீர் அந்த பிஞ்சு உள்ளங்களை என்று வரிகளால் வாதம் செய்துள்ளீர்கள்.,
    உள்ளத்தை வதைப்பதும் அவர்கள் உயிரை பறிப்பதும் ஒன்று தான் என்பதை எடுத்தியம்பும் உங்கள் எண்ணங்களை உணர்ந்து கொள்ள வேண்டும் இந்த இறுகிய உள்ளங்கள்.

    பதிவுக்கு வாழ்த்துக்கள் தமிழ். உங்கள் எண்ணங்கள் போன்றே உங்கள் பதிவுகளும் பாசத்தை பொழிகின்றது.

    ReplyDelete
  2. தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி..!

    ReplyDelete
  3. //நாளிதழ்கள் பலரின் பொது அறிவுப்பெட்டகத்தினைத் திறந்து வைக்கும் திறவுகோள்களாகும்.//

    உண்மை கூற்று. ஆனால், இதே நாளிதழ்கள்தான், குறிப்பாக நம் நாட்டு தமிழ் நாளிதழ்கள் நம் இனத்தின் பொது அறிவுப்பெட்டகத்தினைப் பூட்டி வைத்திருக்கும் திறவுகோள்களாகும்.

    நல்ல கட்டுரை. தொடரட்டும் உங்கள் எழுத்து... வாழ்த்துகள்!

    ReplyDelete