Monday, July 19, 2010

அம்பலப்படுத்துவதடியோடு ஒழியட்டும்!!!


வீடெங்கும் தடபுடல் அமளியென அதிர்ந்திடவே
வீதியெங்கும் தோரணங்கள் தொங்கிச் சிரித்திடவே

வீடியோக்காரர்களும் வித விதமாய் படம்பிடிக்க
வீணான செலவுகள் எதற்கென்றே புரியவில்லை!

பதின்மூன்று வயதிலவன் பத்து "ஏ"க்கள் பெற்றிருந்தான்
பந்தலும் போடவில்லை பரிசுகளும் குவியவில்லை

பத்தே வயதுபெண் பருவம்தான் அடைந்துவிட்டால்
பட்டுப்புடவைகட்டி பலகாரங்கள் பல ஊட்டி

பத்திரப்படுத்துவாதாய் பதுக்கியேவைத்தார்கள்
பத்தியமானதாய் எதை எதையோ சொன்னார்கள்

ஆருமில்லா அறைதனிலே அவளை அமர்த்திட்டர்
ஆணியொன்றினையோ அவள்தலையில் செருகிட்டர்

அதற்கான காரணம் யாதென கேட்டிட்டால்
அமுக்கிப்போடும் பேயினை விரட்டவே என்றிட்டர்

ஆண்பாலும் பெண்பாலும் தெரிந்திருக்கு பேயுக்கு
அப்பெண்படும் பாடுத்தான் தெரிவது யாருக்கு?

அவளுக்கும் அண்ணனுக்கும் இடைவெளி கூடும்
அப்பனுக்கும்கூட அதேகதைத்தான் தொடரும்

விடியலதை எதிர்ப்பார்த்து குளியாட்ட வந்திடுவர்
விட்டப்பணம் பிடிக்க விழாவுக்கு வித்திடுவர்

விந்தையான கதைகளை வரம்பின்றி செப்பிடுவர்
விதிமுறைகள் பலவற்றை அவளுக்கு திணித்திடுவர்

அழகான அழைப்பிதழ்கள் ஆயிரம் அச்சிட்டு
அதற்கு மஞ்சளும் பூசி மங்கள நாள் பார்த்து

பூப்புனித நீராட்டு விழாவினை நிகழ்த்துகின்றார்
பூப்பெய்த கதையை பூரிப்பாய் மெச்சுகின்றார்

ஆசைவரும் அவளுக்கும் அறியாத வயதன்றோ?
அழுதே அடம்பிடிப்பாள் விழாவெடுக்க வேண்டுமென்று

ஆய்ந்துணர்க உறவுகளே அவசியமா இதுவெனவே
அசிங்கத்தை அவளுக்கு ஆழமாய் உணர்த்துகவே

மாமியார் சொல்லியதால் மதியிழந்து நிற்காதே
மாமன்காரன் வந்துவிட்டால் மாலைப்போடவிடாதே

சராசரியாய் வரும் சங்கதியாம் பெண்ணுக்கு
சாதனைப் படைத்ததுபோல் பிதற்றல்கள் எதற்கு?

வயதிற்கு வந்துவிட்டால் ஊரெல்லாம் சொல்லுவதும்
வாலிப நெஞ்சதனில் நஞ்சதனை புகுத்துவதும்

காணாத வளர்ச்சிகளை காட்ச்சிக்கு கொணர்வதுவும்
காமத்தை ஏற்றிவிடும் கடுஞ்செயலைக் கூட்டிவிடும்!!

மூடத் தனத்தினையே மென்மேலும் நாட்டிவிடும்
முடக்கிஒடுக்கிடவே பெண்ணியமும் தோல்வியுறும்

வெற்றான செயல்களை வெறுத்துநீ ஒதுக்கு
வெட்கிக் குனிந்திடும் காரியத்தை கவிழ்த்து

விஞ்ஞான வளர்ச்சியினால் மிளிரட்டும் அறிவு
வீணான சடங்குகளைத் தீயிட்டுக் கொளுத்து!!

அப்பக்கம் திரும்பேன்..!


அர்த்தமற்ற ஒன்று
வலுக்கட்டாயமாக பிய்த்துக்
குதறப்பட்டதை எண்ணியே
காலங்கள் கசக்க
கழிந்தன...

விதிப்படி...
விண்ணப்பங்கள் குவிய,
விரட்டும் உலகம்
துரத்தும் தூரமென
வெட வெடுத்து
ஓடலாயின
உணர்வலைகள்..!

விபத்துகள் பல கடந்து,
விம்மி விம்மியே அழுது,
வீழ்ந்து வீழ்ந்தே
கிழிந்து தொங்கி
நார் நாராய்
நசுக்கப்பட்ட இதயம்..
இனியும் வீழேனென
தாமாகவே தம்மை
புதைக்குழிக்குள் இருத்த
பழகிவிட்டிருந்தது..!

திட்டவட்டமாக
அப்பக்கம் திரும்பேன் என்ற
இதயம்தான்...
தொட்டவுடனே மறுக்காமல்
அப்பக்கம் சாய்ந்துக்கொண்ட
மரபு...
விளங்கப்படுத்தாமலேயே
விலக்கப்பட்டிருந்தது..!

வலிகள் தந்ததால்..
அன்று..
'அது' அசிங்கமானது..
அன்பை பொழிந்ததால்..
அதே 'அது' இன்று
அழகாகவே
அசிங்கப்பட்டிருந்தது!
ஆனாலும்,
அசிங்கமான அந்த அழகு,
இனி ஆரிடத்திலும்
பெறத்தக்கதன்று..!

அதனாலோ என்னவோ?
மாற்றார் கண்ணுக்கு
உறுத்தலாய்ப்பட்டது,
தோற்றுத் தோய்ந்த
உள்ளத்திற்கு
உரமாய்த் தரித்தது!

இதயம்..
அசிங்கம் பாராமல்
அன்பிற்குள் அமிழ்ந்து,
ஊன்றிப்போனது..!

நிரந்தரமில்லைதான்..
ஆனாலும்,
நிம்மதியான
நிமிடங்களுக்குள்
நீந்தத் தெரியாமல்
சாவதே மேலன்றோ?

இடம்தந்த
அன்புக்கூட்டிற்குள்
புது 'மன' புகு விழா!
அன்பே மையமாக
புதுவரவை
இன்பமாய் காத்தது..
தன்னிலை மறந்து
துன்பமும் வார்த்தது!

விசித்திர வசிப்பிடம்
அதில் வசித்திடல்
சுகம்..சுகம்..!

இதயத்தில்..
காயமில்லாமலே
கசிந்தது குருதி
நோகடிக்காமலே
நொடிந்தன ஆசைகள்!

தேங்கி நிரம்பிய
கண்ணீர் குளத்தில்
காகிதக் கப்பல்விட்டு
மகிழ்ந்தன நிராசைகள்!

"மீண்டும்..
அப்பக்கம்
திரும்பேன்
என்றன,
இரவல் இடத்தில்
இருந்த படியே..
இதயமும்
அதனோடிசையும்...
இழப்புகளும்..!