Wednesday, September 15, 2010

காதலுக்கேதடா வயது???


மூதாட்டி:
பெற்றெடுத்த முத்துக்களை காணவில்லை
பெயர்காக்க ஒரு மலரும் பூக்கவில்லை
தள்ளாடும் வயதில் ஒரு தடியும் இல்லை
தளராமல் இருக்கும் மனம் எனக்குமில்லை..!

முதியவர்:
வாடுவதும் ஏனோ என் கண்ணே...
தேடுவதும் எதையோ என் பெண்ணே...
உன் மணவாளன் நானிருக்கேன் மணியே..
உன் மகனை மறந்து வா தனியே..

மூதாட்டி:
பெற்ற மனம் என்றுமே பித்தத்தான்
பெற்ற வலி என்றுமே எனக்குத்தான்
விட்டுவர கூவுதிங்கே இதழ்தான்
விம்மியழ ஏங்குமிங்கே மனம்தான் !

முதியவர்:
மணமுடித்த நாளே முடிவெடுத்தேன்
மரணம்வரை நான் உடனிருப்பேன்..
மாதரசி உன்னில் நான் கலந்திருப்பேன்
மார்போடு உன்னையே அணைத்திருப்பேன்

மூதாட்டி:
நரைத்த முடியும் நடுங்கும் உடலும்
நடவா காலும் நகைப்பது தெரியலையோ?
கிழடு தட்டியும் கிண்டலா உமக்கு?
கிட்டுமோ காதல் இவ்வயதில் நமக்கு?

முதியவர்:
அட அறியாமைக்குப் பிறந்தவளே
அறிந்துகொள்ளடி அன்பான என்னவளே
இனித்தான் காதல் கிட்ட வேண்டுமா?
இருபதில் கிட்டியதை மறைக்கலாகுமா?

நாற்பதிலும் காதல் நாற்றாங்காலிடும்
ஐம்பதிலும் கூட அகக்களிப்பு கூடும்
அறுபதிலும் நேசம் அழகாய்ப் பூக்கும்
எழுபதிலும் கூட மெதுவாக தாக்கும்

வம்பை காதலில் நுழைக்காமல் மோது
அன்பை செலுத்து கொண்டவர் மீது
சாதலுக்கே வயதில்லை எனும்போது
காதலுக்கேதடா வயதென்று ஓது

மூதாட்டி:
அடுத்தடுத்து உரைக்கின்றீர்
எடுத்தெடுத்து தொடுக்கின்றீர்
மடுத்தது என் செவிதானா???
தொடுத்தது உம் கவிதானா?

அழகாக காதலின் தெளிவுரைத்தீரே
அன்பாக எந்தன் கரம் பிடித்தீரே
காதல் கடனை எமக்களித்தீரே
கடன்காரியாய் எமை அவதரித்தீரே!

முதியவர்:
காதலியே நீ எனக்கு என்றுரைப்பேன்
கடன்காரியாக்கவா கருத்துரைத்தேன்
கன்னம் நனைய நான் காத்திருப்பேன்
காதலை உணர்த்தும்வரை பார்த்திருப்பேன்

மூதாட்டி:
வந்தேன் வந்தேன் காதல் சித்திரமே
தந்தேன் தந்தேன் காதல் முத்திரையே
தித்திக்கும் காதல் சின்னம்கொண்டே
எத்திக்கும் படரட்டும் நேசச்செண்டே!

முதியவர்:
மீட்டுப் பார்த்தேன் பழங்கதையை
மீண்டும் வீழ்ந்தேன் உன் வலையில்
மீள முடியாமல் உன் பிடியில்
மாள வேண்டுமே உன் மடியில்!

"முதுமை இருந்தது முகத்தினிலே புதுமை பிறந்தது அகத்தினிலே..!!"

8 comments:

  1. அழகிய அர்த்தமுள்ள வரிகள்...
    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. சாதலுக்கே வயதில்லை எனும்போது
    காதலுக்கேதடா வயதென்று ஓது
    Super!!

    ReplyDelete
  3. அதுக்குள்ளே எப்படி இப்படியெல்லாம் யோசிக்க முடியுது!
    பாட்டிதான் போங்க!

    ReplyDelete
    Replies
    1. எதையெல்லாம் இரசிக்கவியலுமோ அதையெல்லாமே வார்த்தைகளில் அடக்கிடலாமே.. இதற்கு நான் பாட்டியாக வேண்டுமா என்ன?

      Delete
  4. புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
    எனது ப்ளாக்கில்:
    பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
    புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தாங்கும் வாய்ப்பு
    A2ZTV ASIA விடம் இருந்து.

    ReplyDelete