Saturday, October 10, 2009

வள்ளுவனா? வல்லுனரா?


பெருங்குடியாம் தமிழதிலே
வள்ளுவனே பிறந்திட்டாய்
தமிழ்த்தாயின் தமிழ்ப்பாலை
அருமையாய் அருந்திட்டாய்
பெருமையாய் பலகுறள்கள்
எத்தனையோ எழுதிட்டாய்
தமிழ்மணத்தை பாரெங்கும்
ஆங்காங்கே விதைத்திட்டாய்

கல்லாதவன் கண்ணதனைப்
புண்ணென வொப்பிட்டாய்
மாந்தன் கல்விதனைக் கற்றிடவே
வகைப்பலச் செய்திட்டாய்
காதல்வயம் கொண்டவனோ
ஊடலினால் குமுறிடவே
மனிதக்காதலதை இன்பத்துப்
பாலாய் நீபெருக்கிட்டாய்

குருடனவன் விழிக்கொண்டான்
குறளெனும் திறவுகோலால்
மன்னனவன் மாசகன்றான்
பொதுமறையின் பொதுவறிவால்
கயவனவன் தவறறிந்தான்
தண்டித்தத் தமிழ்மறையால்
மனிதக்குலம் அத்துணையும்
மாண்படைந்த துன்னாலே

நாடுபல வென்றிடலாம்
காடுமலை ஏறிடலாம்
ஏழடியில் எப்படித்தான்
ஏழ்கடலை அடக்குவதோ?
நன்னெறிகள் பலவுண்டு
நன்மொழியும் பலவுண்டு
எமதுநெறி என்றாலே
முப்பாலுக் கொப்புண்டோ?

தித்திக்கும் இரண்டடியில்
உலகதனை அடக்கிட்டாய்
தீராத சமுதாய
நோயெல்லாம் தீர்த்திட்டாய்
வள்ளுவனே உனது பெயர்
உண்மையிலே வள்ளுவனா?
வாழ்வுதனை வளமுடனே
வகுத்திட்ட வல்லுனரா?

2 comments:

  1. ம்ம்ம்ம்...ஆரம்பமே வள்ளுவரோட வந்துள்ளீர்கள்.
    தொடர்ந்து எழுதுங்கள்,வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. அருமையாக எழுதுகிறீர்கள்.தொடர்ந்து உங்கள் படைப்புகளை
    காண ஆவலாக உள்ளேன் by anbu

    ReplyDelete