எதுவுமே இல்லாத
பொழுது ஒரு மனிதனிடத்தில் இருக்கும் பொறுமையும் எல்லாமே இருக்கும்பொழுது ஒரு
மனிதனிடத்தில் இருக்கும் நடத்தையும் அவனை யார் என்று உலகுக்கு
காட்டுமென்கிறார்கள்.
எல்லாமே இருந்து
பழகிவிட்டப் பிறகு, எதுவுமே இல்லாமை என்பது வெறுமையைத் தருகிறது. வெறுமையை
உணரவிடாமல் தடுப்பதற்கு உறவுகள்கூட சில சமயங்களில் உதவுவதில்லை. காரணம்யாதெனில்,
உதவிக்கூட சலித்துப் போய்விடுமென்ற நிதர்சன நிஜமே. இழப்பதில் மீட்பவை என்ற என் சுய
பட்டியலில் போதனைகளே முதலிடம் வகிக்கின்றன. இழப்பு கவலையைக் காட்டிலும் பல
போதனைகளை நமக்கென விட்டுச் செல்கின்றது. அதில், கண்டெடுத்த நிஜமானது,
எப்பேர்ப்பட்ட சூழலிலும் யாரிடமுமே உதவிக்கேட்க கூடாதென்பதும், தாமாகவே உதவ
வருவோரைத் தவறாமல் தடுப்பதென்பதும் அவசியமானவை. காலத்தினாற் செய்த உதவி என்றாலும்,
அதனை மறவாமல் திருப்பி தந்தாக வேண்டும்.
உதவிகேட்பதும் உதவியைக்
கேளாமலே பெற்றுக்கொள்வதும் வெட்கப்படத்தக்கதே! இழப்பு நமக்குத் தவறாமல் உணர்த்தும்
அற்புத பாடமிது. வேண்டுமென்றே ஒன்றை இழந்திருக்க மாட்டோம். சூழலும் அதனைச்
சார்ந்தோரும் நாம் எதையோ ஒன்றை இழக்க காரணமாக இருந்தாலும், இழந்தவர்கள் நாம்
என்பதால் இச்சமுதாயம் நம்மைத்தான் தூற்றும். தூற்றுபவர்கள் தூற்றட்டுமென்று நாமும்
போராட எத்தனிப்போம். அப்பொழுதுதான், யாவுமே நம்மைத் தூற்றுவதை உணர்வோம்!
நெறுக்கமான உறவுகள் கூட காலவதியோடுத்தான் உதவுகின்றன என்பதை உணரும் தருணங்கள் வலிகள்
நிறைந்தவை.
சுயகௌரவமென்ற ஒரு
பெரிய வலையிலிருந்து மெல்ல மெல்ல தவழ்ந்து வந்து, தகுதி ஏதும் பாராமல் ஏதாகினும்
செய்து நம்மை நாமே காத்துக்கொள்ள விளையும் தருணங்கள் வர்ணிக்கவியலாதவை. எதுவுமே
இல்லாமல் இருப்பதைவிட ஏதாவது ஒன்று இருக்கட்டுமே என்று பாடுபடும் பொழுதும்கூட, ஒரு
வழியும் பிறக்காதது வேதனையே என்றாலும், நம் முயற்சிகள் அறிந்தும், வழிகள் பிறக்க
நாம் காத்துக்கிடப்பது அறிந்தும், நம்மை ‘ச்சீ’ என புகலும் இகழ்வோரின் தூற்றல்தான்
மிகக் கொடியது என்பேன். தூற்றலை துடைத்தொழி என பார்போருக்கு நாம் முன்பொருநாள்
அளித்த இலவச அறிவுரைகள் நமக்கே செல்லுபடியாகததைக் கண்டு வியந்து நெகிழ்ந்து,
வாழ்தலில் அவ்வப்பொழுது சாதலைப் பார்த்துவிடுவோம். இருப்பதும், நகர்வதும்,
நகைப்பதும், நடிப்பதும் வெறும் சடலமோ என்ற வினா நமக்குள்ளேயே வந்து போகும்; ஆனாலும்
சாகாமல் வாழ்ந்துக்கொண்டுதான் இருப்போம். எதிர்ப்பார்ப்புகளுக்கு அப்பாற்ப்பட்ட
வாழ்தலில், இலட்சியத்திற்கேது இடம்? ஆனாலும், இலக்கற்ற வாழ்வா உனதென்ற நகைப்புகள்
ஆயுதமின்றி ஆளைக்கொந்திவிட்டிருக்கும்!
நகைத்தோருக்கு நன்றி
நவிழ்ந்து, இகழ்ந்தோருக்கு இன்முகம் காட்டி, வழிதேடும் பயணமே எமதாகட்டும்! எமக்கென
இருக்கும் உயிரும், அதற்குள் இருக்கும் நம்பிக்கையுமே எம்மை இழுத்துச்செல்லும் சக்கரங்கள்
ஆகட்டும். நாம் வாழப்பிறந்தோர். வாழ்வென்பதும் ஓர் இயல். கற்றுத்தெளிவோம்
வாழ்வியலின் இரகசியங்களை. இன்று தூற்றுவோர் நாளைப் போற்றுவர். மாற்றங்கள் மாற்றுபெரும்.
வாழ்தல் இனிது!