Wednesday, November 11, 2009

தாயே உனக்காக...


சிறகடிக்க விட்ட சிறந்தவளே -எனை
சீராட்டி வளர்த்த தாயவளே
பாலூட்டி வளர்த்தவர் மத்தியிலே -எனை
பாராட்டியே வளர்த்த பெற்றவளே!

ஆசானுக்கே ஆசானாய் இருந்தவளே
ஆசைகளை ஆசையாய் தீர்த்தவளே
நடமாடும் வியப்பாய் திகழ்ந்தவளே
நட்போடு நட்பாய் கலந்தவளே!

ஒளிமறந்து இருளதனில் தவிக்கையிலே
வழிமறந்து விழிததும்பி துடிக்கையிலே
கைக்கோர்த்து கண்துடைத்த மருந்தவளே
கரம்பிடித்து கரைசேர்த்த ஈன்றவளே!

வலிமறந்து வழியறிந்தேன் உன்னாலே
உனதன்பு எனைத்தொடரும் பின்னாலே
அதட்டலோடும் அன்போடும் நீ சொன்னாலே
என்தலை மட்டும் தலைவணங்கும் தன்னாலே!

நீயில்லையெனில் இந்நிலை எனக்கில்லையே
நீயில்லாத வாழ்வில் வழியில்லையே
நிகரேதும் இங்கு உனக்கில்லையே
நின்னை மறந்தால் நான் அழகில்லையே!

வெற்றியதன் முதற்படியை தொட்டேனே
உன் உச்சிதனை குளிர்ந்திட வைத்தேனே
களிப்போடு உனைக் கட்டியணைத்தேனே
மகிழ்வோடு முத்தமு மிட்டேனே

Tuesday, November 10, 2009

இதற்குத்தானே? அப்பா..அப்பப்பா


இந்த நொடிகளில் நீங்கள்
அழுதீர்களா? சிரித்தீர்களா?

நான் இந்த ஆடையை
அணியும்போது
நீங்கள்எப்படி கலங்குவீர்களோ..
அதைவிட இரட்டிப்பாக
உங்களுக்கு அணிவிக்கும்போது
நான் கலங்கி நின்றேன்..!

மகிழ்ச்சியை மறைக்க
மனம் இல்லை..
ஆனாலும்
காட்டிக்கொள்ள
நீங்கள்
தயாராக இல்லை..

மறந்து போய் நின்றீரோ?
கண்ணாடி முன்..?
விம்பமாய் தென்பட்ட
உங்களை இரசித்தேன்..!
உங்கள் மன மகிழ்வை...
இரசித்தேன்..
கூடவே
உங்கள் விழிகளில் ததும்பிய
கண்ணீரையும்
ஆழமாக இரசித்தேன்!
கண்ணாடியே..
நன்றிகள் ஆயிரம் சொல்வேன்..

சாதித்த களிப்பு!
சிரிக்க வேண்டுமென்ற தவிப்பு!
அழ வேண்டுமென்ற முனைப்பு..
உங்களை வணங்க வந்த
என் கரங்களின் துடிப்பு!

அப்பப்பா!
என்னெவென்று சொல்ல?
சில நொடிகள்
ஊமையானவை
ஆனாலும்..
மனதின் மூலையில் முனு முனுக்கும் உணர்வுகள் மட்டும்
பேசுகின்றன..!
நம்மை பேசாமலே..
பேசவைக்கின்றன!
சிரிக்காமல்..சிரித்த கதையை..
உங்கள் மனமறியும்!
அழாமல் அழுத கதையை..
உங்கள் மகள் அறியும்!

நான் வாழ்த்தி வணங்குவது
உங்கள் போதனையை..
இனி முறிக்க முனைவது
உங்கள் வேதனையை..
இடைவிடாமல் தொடரப்போவது
எனது சாதனையை...!