Thursday, March 4, 2010

மலேசியத் தமிழ் நாளிதழ்கள் -ஒரு சிறு ஆய்வு!!!!


“காரிருள் அகத்தில் நல்ல
கதிரொளி நீதான்! இந்தப்
பாரிடைத் துயில்வோர் கண்ணிற்
பாய்ந்திடும் எழுச்சி நீதான்!
ஊரினை நாட்ட இந்த
உலகினை ஒன்று சேர்க்கப்
பேரறி வாளர் நெஞ்சிற்
பிறந்த பத்திரிகைப் பெண்ணே!

அறிஞர்தம் இதய ஓடை
ஆழநீர் தன்னை மொண்டு
செறிதரும் மக்கள் எண்ணம்
செழித்திட ஊற்றி ஊற்றிக்
குறுகிய செயல்கள் தீர்த்துக்
குவலயம் ஓங்கச் செய்வாய்!
நறுமண இதழ்ப் பெண்ணேஉன்
நலம்காணார் ஞாலம் காணார்.”

என்று பாரதிதாசன், பத்திரிகையின் புகழினை அழகாக ஒப்புகின்றார். ஆனாலும், மலேசியா தமிழ் பத்திரிகைகள் இதற்கு சான்றாக செயல்படுகின்றனவா? அவை உண்மையிலேயே தமிழ் மக்களுக்கு ஒரு சிறந்த தகவல் ஊடகங்களாக விளங்குகின்றனவா? இது சற்று ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஆய்வாகவே உள்ளதென்றால் வியப்பதற்கில்லை! நாளிதழ்கள் என்றாலே நாள்தோறும் மக்களைச் சென்றடைய வேண்டிய ஒன்று என்றே சிலர் கருதுகின்றனர். "என்ன நடந்தாலும், இன்றைய பத்திரிகை பிரசுரிக்கப் பட்டுவிட்டது, எதிர்ப்பார்த்த இலாபம் கிட்டும்" என்ற எண்ணத்தில் மட்டுமே பத்திரிகைகள் வெளியிடப்படுமானால் அது வெட்கப்படத்தக்கதே. மலேசியா மண்ணைப் பொறுத்தமட்டில், தமிழ் நாளிதழ்களின் பங்கு பிற மொழி பத்திரிகைகளோடு ஒப்பிடுகையில் தரத்திலும் தகவல் வழங்குவதிலும் தரம் குன்றியே காணப்படுகின்றது என்பதும் மறுக்கப்படவியலாத உண்மையே.உதாரணத்திற்கு, வேலை வாய்ப்புகள் பற்றிய விளம்பரங்கள் பெற எல்லா இனத்தவர்களும் ஆங்கிலப் பத்திரிகைகளையே நாடுகின்றனர் . காரணம், நமது நாட்டில் மட்டுமல்லாது உலக அளவிலும் வேலை வாய்ப்புகளைப் பற்றிய பரந்த கண்ணோட்டத்தினை மக்கள் முன்னிலை கொணரும் தன்மையை அவைப் பெற்றிருக்கின்றன என்பதே.

அரசியல் சார்ந்த எல்லா தகவல்களையும் அவ்வப்போது மக்களுக்கு சரியாக வழங்கி வந்தாலும், ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியினைப் பற்றி ஆழமாக தெரிந்துக் கொள்ள விரும்பும் வாசகர்கள், குறிப்பிட்ட ஒரு பத்திரிகையையே வாங்கி தெளிந்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் மக்கள் மனதில் ஊடுருவி இருப்பது நாளிதழ்களுக்கிடையிலான பிரிவினையையும் சித்தரிக்கின்றது. இது இந்தக் கட்சியின் பத்திரிகை, அது அந்தக் கட்சியின் பத்திரிகை, இதுவோ நடுநிலைப் பத்திரிகை என்றெல்லாம் பத்திரிகைகளையே வகைப் படுத்தி இருக்கின்றார்கள். இவ்வெண்ணம், மக்களுக்கிடையிலேயும் பிரிவினையை நன்கு வளர்த்திருக்கின்றது.

ஆனாலும், நமது மண்ணின் மைந்தர்களின் திறமைகளையும் கலை ஆர்வத்தினையும் வெளிக்கொணரும் முக்கிய தளமாக சில தமிழ் நாளிதழ்கள் பங்காற்றி வருவது பாராட்டிற்குரியதே. மேலும், நமது நாட்டில் சில அரும் பெரும் தமிழ் நெஞ்சங்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுவரும் தமிழ் நிகழ்வுகளை விளம்பரப்படுத்தி, பொது மக்கள் அது போன்ற நிகழ்வுகளில் தங்களை ஈடுப்படுத்திக் கொள்ள உந்து சக்தியாக இருந்தும் வருகின்றது. மாணவர்களுக்கான பக்கங்கள், வேலை வாய்ப்பு சம்பந்தப்பட்ட விளம்பரத் தகவல்கள், மகிளிருக்கான பயனுள்ள பகிர்வுகள், மக்கள் மனதில் தோன்றும் ஓலங்கள், வாசகர் படைப்புகள் போன்றவை அச்சிடப்படுவது மனதை மகிழ்வுற வைக்கின்றது.

இருப்பினும், எமது கேள்வியெல்லாம்,இது போன்ற செய்திகளும் அறிக்கைகளும் தினந்தோறும் இடம்பெறுகின்றனவா? நாளிதழ்கள் என்பன நாள்தோறும் மக்களை பயனுள்ள விடயங்களுக்குள் ஆழப்படுத்த வேண்டாமா? மக்கள் படைப்புகளைக் காண வேண்டுமாயின், ஞாயிறு இதழ்கள் கைக்குள் இருந்தாலே போதுமென்ற அசைக்க முடியாத எண்ணம் நம்முள் வேரூன்றி இருக்கிறதே? இந்த நிலையை மாற்றும் தன்மை பத்திரிகையாளர்களிடமே இருக்கின்றது என்பது வெள்ளிடைமலை.

நடிகைகளின் கவர்ச்சிப் படங்களை பெரிய அளவிலும் கவர்ச்சிகரமானதாகவும் வெளியிடும் பத்திரிகைகள், மாணவர் படைப்புகளையும் வாசகர் படைப்புகளையும் வெறும் கருப்பு வெள்ளையில் பிரசுரித்து காட்டுவது வேதனைக்குரியது. மேலும், குட்டி குட்டி பெட்டிகளுக்குள் முக்கிய தகவல்களை அச்சிட்டு மேலும் இந்த சமுதாயத்தை ஒரு கட்டத்திற்குள்ளேயே நாளிதழ்கள் இயங்கச் செய்கின்றன. இன்று நிகழ்ந்த ஒரு சம்பவத்தை இங்கு பகிர்ந்தே ஆகவேண்டும். எதுவுமே இல்லாத அந்த நித்தியானந்தாவின் செய்தியை முன்பக்கத்திலும் பின் பக்கத்திலும் முழுக்க முழுக்க வர்ணத்தில் ஆபாசம் என்றும் பாராமல் அச்சிட்டது ஒரு தாய் தன் மகளின் முன்னிலையில் நாளிதழினை ஒழித்துப் படிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் ஆழ்த்தியதை கண்கூடாகப் பார்த்த நொடிகளில், மலேசிய நாளிதழ்கள் எதை நோக்கிச் செல்கின்றன என்பதை எம்மால் கண்டுகொள்ளவே இயலவில்லை. கழிவறைகளில் ஒழித்துப் படிக்கப்படும் இழிவான இதழ்களின் நிலையிலா நமது நாளிதழ்கள் இருத்தப்படுகின்றன? இவர்களின் இது போன்ற செயலாக்கங்கள், பணம் ஒன்றே நோக்கமாக நமது நாளிதழ்கள் பிரசுரிக்கப்படுகின்றன என்பதினை உள்ளங்கையில் நெல்லிக் கனிபோல் தெள்ளத் தெளிவாக தெரியப்படுத்துகின்றன.

மேல் குறிப்பிட்டது போல, சாமியார்களின் அட்டூழியங்களையும் நடிகைகளின் ஒழுக்கக்கேடான செயல்களை பற்றியும் நாளிதழ்களில் வெளிக்கொணர்வது தவறு என்று குற்றம் சாடவில்லை. ஆனாலும், அது போன்ற செய்திகள் மக்களுக்கு எவ்வகையில் பயன் அளித்தன? "குறிப்பிட்ட நடிகை மீது நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்குமா?" என்ற கேள்விக்கு பதிலாக "இனியும் மக்கள் இதுபோன்ற சாமியார்களை நம்புவார்களா?" என்று வினா எழுப்பி இருந்தால், நிச்சயமாக அது மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கும் அல்லவா? "விழிப்புணர்வு" ஆம், இதுதான் நாளிதழ்களின் தலையாய பங்கு. அதை நாளிதழ்கள் செவ்வனே செய்து வருகின்றனவா? இன்று இது போன்ற திடுக்கிடும் தகவல்களைப் பிரசுரித்த இதே நாளிதழ்கள் தாம் ஏற்கனவே "பிரபல xxxxxxxx சாமியார் மலேசிய வருகை", “உடனே ஆசிப் பெற்றுக் கொள்ளுங்கள்!”, “அம்மாவின் அமுத தீர்த்தம் பெற இன்றே முந்துங்கள்!!”, “ஆசி பெற காசி வரை போக வேண்டாம்!” என்றெல்லாம் வார்த்தைகளை அழகாக கோர்த்து எம் மக்களிடையே தவறான எண்ணங்களைப் புகுத்தியது என்றால் மறுப்பார் உண்டோ?

தினம் தினம் வன்முறையால், "கொலை வெறி" எனும் நோயால் படுத்த படுக்கையாய் பகுத்தறிவை இழந்தவனாய் வாழும் எம்மின இளைஞர்களுக்கு வழிப்புணர்வை கொண்டு வராமல், அந்த கொலையையும் கொடூரக் காட்சிகளையும் படம் போட்டுக் காட்டுவதை நிறுத்த வேண்டும். அந்த கொலை எப்படி நடந்தது என்று நேரில் நின்றுப் பார்த்த சாட்சியினைப்போல் வர்ணித்து எழுது வதையும் வன்மையாக கண்டிக்கிறேன். காலப்போக்கில், இவர்களே "கொலை செய்வது இப்படித்தான்" என செய்திகள் வெளியிட்டாலும் வியப்பதற்கில்லை! திருத்துங்கள். திருத்த முயற்சியாவது செய்யுங்கள். ஆனால், நீங்களே தூண்டுகோளாகிவிடாதீர்கள்!! பட்டம் பெரும் பட்டதாரிகளின் படங்களையும், சிறந்த தேர்ச்சிப் பெற்ற மாணவர்களின் படங்களையும் இலவசமாக அச்சிடுவது அற்புதமான செயல். ஆனால், அவற்றை பெரிய அளவுகளில் அச்சிட்டு, பிற மாணவர்களுக்கு ஊக்குவிப்பாக அமையும் வண்ணம் வார்த்தைகளை அலங்கரியுங்கள். அது அவசியமானது.!!!

சில பத்திரிகையாளர்களுடன் ஏற்பட்ட நட்பில் மேலும் சில தகவல்களையும் நான் பெற்றுக் கொண்டேன். இன்றைய சில பத்திரிகை எழுத்தாளர்கள் தமிழில் நன்கு எழுதப் படிக்கத் தெரியும் என்ற தகுதியைத் தவிர வேறு எந்த தகுதியும் அற்றவர்களாவர். சில திரைப்படங்களில் குறிப்பிட்டது போல, சில செய்திகள் தி.ஆர். இராஜந்திரனின் வசனங்கள் போல சந்தங்கள் நிறைந்தவையாக இருப்பது சிரிக்க செய்தாலும் சிந்திக்கவும் செய்கின்றன. இவர்களின் இந்த செயல்,முக்கியமான செய்திகளையும், எண்ணங்களைச் சிந்திக்கத் செயல்படத் தூண்டும் செய்திகளையும், பகுத்தறிவிற்கு பாதை வகுக்கும் பகிர்வுகளையும், கவலைக்கிடமான விடயங்களையும் கூட நகைச்சுவையாக மாற்றும் தன்மை வாய்ந்தவை என்பதை ஏனோ அவர்கள் நினைவுக்கூற தவறுகிறார்கள்?

அதைவிட வருத்தத்தில் ஆழ்த்தும் கதை ஒன்று உண்டு. முன்பெல்லாம், மக்களுக்கு பயனான செய்திகளைத் தர வேண்டுமென்ற நோக்கத்தில் அங்கும் இங்கும் வியர்வை சிந்தி உழைத்த பத்திரிக்கையாளர்கள் இருக்க, இப்பொழுதெல்லாம், செல்வந்தர்களுக்கெனவே சேவை செய்யும் பத்திரிகை நிருபர்களும் இருக்கின்றனர். கிடைக்கும் வருமானத்தை விட, மேலும் பணத்தொகையினை ஈட்டுவதற்காக அச்செல்வந்தர்களைப் பற்றிய செய்திகளையே அதிகமாக வெளியிட அவர்கள் அரும்பாடுபடுகின்றனர். ஒரு குறிப்பிட நபரின் படம் பக்கத்திற்கு பக்கம் தவறாமல் வருகின்றதென்றால், அதற்கு பின்னால் யாரோ ஒரு பத்திரிக்கையாளர் தொண்டனாகவோ, அவர் தரும் பணத்திற்கு அடிமையாகவோ செயல்பட கூடும்.

பத்திரிகையாளர்கள் உலகில் நடந்துவரும் எல்லா நிகழ்வுகளையும் கண்காணித்து வருவது அவசியம். ஏனெனில், நாளிதழ்கள் பலரின் பொது அறிவுப்பெட்டகத்தினைத் திறந்து வைக்கும் திறவுகோள்களாகும் . நாளிதழ்களில் என்ன பிரசுரிக்கப்படுகின்றதோ, அதை அப்படியே அச்சுப்பிசகாமல் நம்புபவர்களும் பின்பற்றுபவர்களும் நம்மில் எண்ணிலடங்காதோர் உண்டு. அவர்களை எல்லாம் சீர்தூக்கிப் பார்ப்பது பத்திரிகைகளின் இன்றியமையா கடமை என்பதினையும் நினைவில் கொள்க.

நாளிதழ்கள் எம்மினத்தின் நாடி!! அதை சீராக இயக்குவது அத்தியாவசியமானது..! இதை உணர்ந்து நாளிதழ்கள் இயங்கவேண்டும். எம் மக்களை சீரான பாதையில் இயக்க வேண்டும். பெரியவர் முதல் சிறியவர் வரை, அனைவரிடத்தும் நாளிதழ் வாசிக்கும் பழக்கத்தை பிறப்பிக்கச் செய்த பின்னர், நாளிதழ்களைப் புரட்டுகையில்.. வெற்றுக் காகிதத்தைப் படிக்கிறோமோ என்ற எண்ணத்தை மட்டும் அவர்களிடையே ஊற்றெடுக்க செய்துவிடக்கூடாது!மக்களின் அறிவுப்பசியினை அவ்வப்போது நிறைவு செய்வதே நாளிதழ்களின் சேவையாகும்! விளம்பரத்திற்காகவோ, விமர்சனத்திற்காகவோ, வியாபாரத்திற்காகவோ நாளிதழ்கள் இயங்க கூடாது. அறிவிற்கு விருந்தாக அவை திகழ வேண்டும்!!